ம.சண்முகநாதன்
`சிவபூமி' எனப் போற்றப்படும் இலங்கையில் அண்மைய காலத்தில் வாழ்ந்த ஒரு மாதவஞானி ஷ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் திருகோணமலையின் பிரதான வீதியில் சிவயோக சமாஜம் எனும் ஆச்சிரமத்தை அமைத்த அவர், தம்மை அணைத்த பக்தர்களுக்கு மன அமைதியையும், ஆன்மீக வழிகளையும் காட்டுபவராகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த இவர், இளமையிலேயே பற்றுகளைத் துறந்து ஞானிகளையும் துறவிகளையும் நாடி தேசசஞ்சாரியாகத் திரிந்தார். இமயமலை அடிவாரத்தில் வாழ்ந்த பல முனிசிரேட்டர்களின் தரிசனத்தைப் பெற்றார்.
1940 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வந்த சுவாமி அவர்கள் கதிர்காமம், யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்குச் சென்றபின் திருகோணமலையை தனது தவத்திற்குரிய இடமாகத் தேர்ந்து கோணேசர் ஆலயத்தை அண்டிய குகைகளில் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
அவரது தீவிர வைராக்கியமும் கடினசாதனைகளும் அவரை ஒரு ஞான புருஷராக்கின.
தாம் பெற்ற தவத்தின் பேறுகளை உலகுயிர்கள் அனைத்திற்கும் அர்ப்பணித்திடும் நோக்குடன் `சிவயோக சமாஜம்' என்னும் ஆச்சிரமம் மூலம் ஆற்றத்தொடங்கினார்.
தாம் ஒரு தபசி என்றபோதும் ஆச்சிரமத்திலே அமர்ந்து உபதேசம் செய்யாமல் சமாஜத்திற்கென இருந்த வயலில் ஒரு விவசாயி போன்று வியர்வை சிந்த உழைத்தார். இந்த உழைப்பு பல்லாண்டுகளாக நிகழ்ந்தது. உழைத்துப் பெற்ற அறுவடை ஏனைய தொழிலாளர்களுக்கும் பகிரப்பட்டது. அவ்வகையில் அவர் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்தார்.
யாரிடமும் எந்தவொரு பொருளையும் பெற்றுக் கொள்ளாமல் தமது உழைப்பால் பெற்ற பலன் மூலமே வாழ்ந்து ஆன்மீக நெறிக்கு புதியதோர் இலக்கணத்தை வகுத்தார்.
சுவாமி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட அரிய நிகழ்ச்சி, வாரந்தோறும் நிகழும் பஜனையாகும். இன்றுவரை பக்தர்களால் தொடர்ந்து ஆற்றப்படும் பஜனை, மனதை ஒருமைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
லௌகீகத் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் உரிய ஒரே சாதனம் பஜனையே என விளக்கிய அவர், பஜனைக்குரிய பாடல்களையும் தாமே இயற்றி இசையமைத்து உதவினார்.
தனித்தனியே ஒவ்வொரு பக்தர்களுடனும் உரையாடி அவர்களது உடல், மனத்துன்பங்கள் நீங்க உதவியமை அவரது கருணையின் உன்னதச் செயற்பாடாகும்.
திருகோணமலை, சிவயோகபுரத்தில் சுவாமி அவர்களால் நடேசர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டன. யுத்தம் காரணமாக சேதமுற்ற அவ்வாலயம் மீண்டும் பொலிவுபெறுவதற்கான காலம் தற்போது கைகூடி வருகின்றது. இந்த ஆலயத்தை அமைக்கும் காலத்தில் ஒரு ஸ்தபதியாகவும், கூலியாளாகவும் அவரே செயற்பட்டமை இன்றும் பக்தர்களால் நினைவுகூரப்படுகின்றது.
சுவாமியின் போதனைகள்
தனிமனித வாழ்விலிருந்து சமூகம், நாடு, உலகம் என ஒவ்வொரு மட்டத்திலும் எங்கனம் செயற்படவேண்டும் என்பதில் தீர்க்கமான கருத்துக்களை அவர் கொண்டிருக்கிறார். தனிமனிதர்கள் உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டவர்களாக ஒழுகினால் மட்டுமே சமூகமும் நாடும் மேம்படும் என விளக்கிய அவர், மனதை வென்றவர்களே உயர்ந்த சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மாதா, பிதா, குரு, அரசன் இந்த நால்வரும் அறநெறியில் வாழ்பவராயின் கெட்ட பிள்ளையும் கெட்ட பிரஜையும் கெட்ட சிஷ்யனும் இருக்க முடியாது எனவும், அறநெறி ஒழுங்கில்லாத அரசியல்வாதிகளின் ஆட்சியில் பஞ்சமாபாதகங்கள் பெருகும் எனவும் தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி இருந்தால்தான் மதகுருமார்களினாலும் மதபிரசாரத்தினாலும் பயன் ஏற்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.
உலக சமுதாயத்தின் இருபெருங் கண்களாகிய அரசதர்மமும், அந்தரங்க சுத்தியுடன் சரியான இலட்சியத்தில் செயல்பட்டால் உயர்ந்த சீலமுடைய மனித சமுதாயம் உருவாகும். அறநெறியும் அரசாட்சியும் பிராணனும் சரீரமும் போன்றவை. அறம் குன்றிய ஆட்சி வீழ்ச்சியடையும். ஒரு தேசத்தின் இயற்கை வளங்களையும் செயற்கை செல்வங்களையும் அந்நாட்டு மக்கள் சமதர்மரீதியில் அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அங்ஙனம் இருந்தால் பஞ்சமா பாதகங்களைச் செய்யத்தூண்டும் உணர்வு குறையும். தேசப்பற்றும் தேசபக்தியும் பெருகும், போன்ற அவரது போதனைகள் எக்காலத்திற்கும் எச்சமூகத்திற்கும் ஏற்புடையனவாக அருளப்பட்டவையாகும்.
அந்தரங்க சுத்தியில்லாத ஒரு சமயவாதியை விட நல்லொழுக்கம் உடைய ஒரு நாஸ்திகள் மிகச் சிறந்தவன். மன்னனும் மனிதனும் மன்னிப்பு அளித்தாலும் தீவினைப்பயன் ஒருபோதும் மன்னிப்பளிப்பதில்லை போன்ற அருளுரைகள் தனிமனிதர்களின் ஆன்மீக உயர்வுக்கு வழங்கப்பட்ட போதனைகளாகும்.
உண்மையான அன்புடனும் ஆழ்ந்த பக்தி விசுவாசத்துடனும் அவரிடம் சென்றவர்கள் அற்புதகரமான பலனைப் பெற்றனர்.
பக்தர்களின் கர்மவினைகளைத் தாமே ஏற்று அவர்களுக்கு மனநிம்மதியைத் தந்தமை சுவாமியின் மகா கருணையாகும். அவர் மகாசமாதி அடையும் நாள் வரை பக்தர்களின் உடல், மனத்துன்பங்களை தாமே ஏற்றுக் கொண்டார்.
"உலக ஷேமமே ஒரு ஞானியின் தர்மம்" என தமது செயற்பாடுகள் மூலம் விளக்கினார்; வாழ்ந்து காட்டினார்.
ஒரு ஆன்மீக இயக்கமாக வாழ்ந்த சுவாமி கெங்காதரானந்தா 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் மகாசமாதி அடைந்தார். ஆயினும், அவரது அருளும் கருணையும் நித்தியமாய் நிலவி, இன்றும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றன.
அத்தகைய ஒரு மகானின் காலத்தில் நாம் வாழக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.