கே.வேலாயுதம் (பொதுச் செயலாளர்)
இன்றும் நாளையும் பதுளை புதிய நூலக கேட்போர்கூடத்தில் 24 ஆவது பேராளர் மகாநாடு
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொன்விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இவ்வேளையில் நாம் அடியெடுத்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்றோம்.
மலையக சமுதாயம் என்றாலே பின்தள்ளப்பட்ட, படிப்பறிவற்ற, ஒதுக்கப்பட்ட ஒரு சமூகம் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருந்த காலத்தை உடைத்தெறிந்து மலையக சமுதாயம் இன்று வளர்ச்சியடைந்து வரும் ஒரு சமுதாயம் என்ற நிலையை ஏற்படுத்தியதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. எமது சங்கம், மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அரசியல், அங்கீகாரம், கல்வி, கலை, கலாசார மேம்பாடு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு செயலாற்றி வெற்றி கண்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்துடன் இதுவரை காலமும் இலங்கையில் நிலவிய விவசாய பொருளாதாரம், பின் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறத் தொடங்கியது. அந்நியச் செலாவணியை வெளிநாட்டு வருமானமாகப் பெற்றுக் கொடுக்கும் நாடாக மாற்றுவதில் எமது மலையக தொழிலாளர்கள் அளப்பரிய பெரும் பங்காற்றியிருக்கின்றார்கள்.
முதல் தடவையாக 1820 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய மலை நாட்டுப் பகுதியில் கோப்பித் தோட்டங்கள் திறக்கப்பட்டன. எனினும், பிளிஸ்டர் பிளைட் என்ற கோப்பி இலை நோய் பயிர்களைத் தாக்கி அழிக்கவே கோப்பித் தோட்டங்கள் கைவிடப்பட்டு தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அநேகமாக எல்லா மலையகப் பிரதேசங்களும் பெருந்தோட்டமயமாயின. இதனால் தோட்டத் தொழிலாளர் பற்றாக்குறை அதிகளவில் தேவைப்பட்டதினால் எழுந்த தேவையைப் பூர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை அவசியமானது. உள்ளூர்த் தொழிலாளர்கள் இக்கடினமான தோட்ட வேலைகளைச் செய்வதற்கு இணங்காததினால் இப்பணிகளைச் செய்வதற்கு தென்னிந்தியாவில் உள்ள அப்பாவி விவசாய குடும்பங்களை இங்கு இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இத்தேவையை பூர்த்திசெய்ய அழைத்துவர வேண்டியதாயிற்று.
இவர்கள் மிக கஷ்டமான சூழல்களின் பின்னணியில் இங்கே பணியாற்ற வேண்டியிருந்தது. அடிமைகளைப் போல நடத்தப்பட்டதுடன் மிகக் குறைவான சம்பளத்துடனும் குறைந்த வசதிகளுடனும் வாழவேண்டியிருந்தது. அவர்களுக்கான தொழிலாளர், சிவில் மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு பண்டமாக கணிக்கப்பட்டதுடன் குறிப்பாக அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். எனினும், மகாத்மா காந்தி பின்னர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வருகை ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்தியது.
1931 ஆம் ஆண்டிலேயே வயது வந்தோருக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்த இவ்வர்க்கத்துக்கு அதன் நன்மைகளைப் பெற அரசு சந்தர்ப்பம் அளித்தது. 1940 இன் பின்னர் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தோற்றம் பெற்றதோடு 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற முதல் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளித் தமிழ் பிரதிநிதிகளை சபைக்குத் தெரிவுசெய்யும் வாய்ப்பை இச்சமூகம் எடுத்துக் காட்டியது. 1948 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு இச்சமூகத்தின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்ததுடன் நாடற்ற மக்களாக உருவாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் இச்சமூகம் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.
தொழிலாளர்களை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க இவர்களது நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஓர் தொழிற்சங்கத்தின் அவசியத்தை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன உணர்ந்தமையைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கு முன்னர் தேசிய ஊழியர் சங்கத்தினை ஜே.ஆர்.ஜெயவர்தன ஆரம்பித்து நடத்திவந்தார். அதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்திலிருந்து பல எதிர்ப்புகளை ஜே.ஆர்.ஜெயவர்தன சந்திக்க வேண்டி நேர்ந்தது. சிலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரோதமாக கடும் போக்கைக் கொண்ட சிவப்பு நிற கட்சிகளின் கொள்கைகளை கட்சிக்குள் உட்புகுத்த முனைவதாக கடுமையாக சாடினார்கள். அக்கால கட்டத்தில் இலங்கையில் லங்கா சமசமாஜ கட்சி பெருந்தோட்டம் உட்பட சகல துறைகளிலும் பலம்மிக்க அமைப்பாக இயங்கி வந்தது.
இவ்வெதிர்ப்பின் காரணமாக கொள்ளுப்பிட்டி ஷ்ரீகொத்தா கட்டிடத்தில் இயங்கிவந்த இவ்விரு தொழிற்சங்கங்களும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன. ஜே.ஆர்.ஜெயவர்தன அதைக்கண்டு சளைக்காது பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த பேவரிட் கட்டிடத்தில் இவ்விரு தொழிற்சங்கங்களை செயல்பட வைத்தார்.
ஜே.ஆர்.ஜெயவர்தன இத்தொழிற்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் சங்கத்தின் செயற்பாடுகளையும் அதன் விழுமியங்களையும் மாற்றியமைத்து இனப்பாகுபாடற்ற தொழிலாளர் அமைப்பாக இதனை உருவாக்கினார்.
இதன் பின்னர் சிரில் மெத்தியூ தலைமைத்துவத்தை பொறுப்பேற்றார். சங்க நலன்களை அபிவிருத்தி செய்வதில் இவர் பெரிதும் கரிசனை காட்டிவந்தார். ஆனாலும், இனப்பிரச்சினை விடயத்தில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டின் காரணமாக தலைமைப்பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து சங்கத் தலைவராக காமினி திசாநாயக்க தெரிவானதோடு சங்கத்திற்கு இவர் பல்வேறான சேவைகளையும் நவீன வசதிகளையும் மற்றும் சிறந்த தலைமைக் காரியாலய புதுக் கட்டிடத்தையும் அமைத்ததோடு பல்வேறான சீர்திருத்தங்களையும் சர்வதேச தொழிற்சங்கங்களின் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொள்ள இவர் ஆற்றிய பணி அளப்பரியது.
அதேவேளையில், காலம் சென்ற எம்.எல்.எம்.அபுசாலி, பியதாச பெலந்தேகம, ஆர்.டி.சுந்தரம் போன்றவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் சங்க செயற்பாடுகளில் முன்னிலையை வகித்தனர். அக்காலகட்டத்தில் காலம் சென்ற ஏ.ஸி.எஸ்.ஹமீத் அவர்களும் ரத்நாயக்க அவர்களும் இணைச் செயலாளராக செயற்பட்டனர்.
இக்கால கட்டத்தில் தான் இத்தொழிற்சங்கம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைத்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களையும் போதிய உணவின்றி பட்டினி வாழ்க்கையையும் அனுபவித்து வந்த காலமும் இதுதான். எனவே, அரசு பெருந்தோட்டங்களை தேசிய மயமாக்குவதை இத்தொழிலாளர்கள் அங்கீகரிக்க மறுத்து வந்தனர். அதனால் இம்மக்கள் மீது இனவாத குரோத செயற்பாடுகளை அரசு கட்டவிழ்த்து விட்டதுடன் எழுதா அடிமை நிலையில் அவர்களை அடக்கியாள முற்பட்டது.
இதற்கெதிராக எமது சங்கத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு வழங்கி வந்ததுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மீது நம்பிக்கையுடன் அணிதிரண்டார்கள். 1970 ஆம் ஆண்டு கடைசிகளில் இத்தொழிற்சங்கம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்றதுடன் சர்வதேச தொழிலாளர் சங்கச் செயல்களில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டது.
அடுத்ததாக ரஞ்சன் விஜேரத்ன சங்கத் தலைவராக தெரிவானார். இவர் பதவி வகித்த காலம் சங்க உறுப்பினர்களினால் இன்னும் நினைவு கூரப்படுகின்றது. அவரின் காலத்திலேயே முதன்முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டினை முன்னெடுத்து அதனை முழுமையாக செயற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில் பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு மரணமானார்.
1991 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க இதன் தலைவரானார். 2002 ஆம் ஆண்டு வரை தலைமைத்துவத்தை வகித்த இவர் வேலைப்பளு காரணமாக தலைமைத்துவத்தில் இருந்து தாமாகவே நீங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார். இவரின் தலைமைத்துவ காலத்தில் தோட்டங்களில் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எடுத்த நடவடிக்கைகளை எம் அங்கத்தினர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர். பின்னர் தலைமைத்துவத்தை ஏற்ற ராஜா செனவிரத்ன, 2007 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி மரணமடையும் வரை பதவி வகித்தார்.
2007 ஜூலை மாதம் தலைவராக பதவியேற்று தற்போது இச்சங்கத்தை வழிநடத்திக்கொண்டிருக்கும் இடைக்காலத் தலைவர் ரவீந்திர சமரவீர, அங்கத்தினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் தொழிலாளர்களின் நலன்களிலும் அக்கறை கொண்டவராக தினம் செயற்படுவதை நோக்க முடிகின்றது.
எமது சங்கத்தின் செயற்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் சங்கத்தின் உட்கட்டமைப்பு, நிர்வாகம், நிதி, தொழிலாளர் கல்வி, தொழில் உறவு, புள்ளி விபரம், வெளிநாட்டு உறவு என தனித்தனி ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகின்றது.
தொழிலாளர்கள் மத்தியில் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காகவும் செயற்பட வேண்டியது தொழிற்சங்கங்களின் கடமை என தொழிற் சங்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி அடித்தளம் இட்டது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்.
வேறு எந்தவொரு தொழிற்சங்கங்களிலும் இல்லாத வகையில் தலைநகரில் விரிவுரை மண்டபம், தங்குமிட விடுதி வசதியுடன் கூடிய தலைமையகத்தை இச்சங்கம் கொண்டுள்ளது.
இன்று பலம்பொருந்திய அமைப்பாக உள்ள இத்தொழிற்சங்கம் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் அவர்களின் நலன்கருதி தொழிலாளர் உரிமைகள் தலைமைத்துவம் ஆண், பெண் சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு விடயங்களில் பயிற்சியளித்து வருவதன் ஊடாக தொழிலாளர் வர்க்கத்திலிருந்து அரசியல் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்கச் செயற்பட்டு வருகின்றது.
நாடற்றவர்கள் என்ற நிலையை மாற்றி குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்க இது பாடுபட்டுள்ளது. அதேபோல் மிக முக்கியமான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது. சகல அபிவிருத்தித்துறைகளிலும் செயற்பாட்டுத் திறன் கொண்ட ஓர் தொழிற்சங்கமாகவும் செயற்பட்டுவருகின்றது.
பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட கடுமையாக உழைத்தபோதும் அவர்களுக்கு குறைந்த சம்பளமே ஆரம்ப காலம் முதல் பல தசாப்த காலங்களாக வழங்கப்பட்டு வந்துள்ளது. எனினும், எமது தொழிற்சங்கம் தனித்து நின்று இதை நிறைப்படுத்த 1984 ஆம் ஆண்டு இரு பாலாருக்கும் சம சம்பளத்தைப் பெற்றுத் தந்தது. முன்னர் வேதன அதிகரிப்பு சதக் கணக்கிலேயே இருந்ததை மாற்றி ரூபா கணக்கில் அதிகரித்து பெற்றுக்கொடுத்தோம். இவ்வேதன அதிகரிப்பும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் பெற்றுக் கொடுத்ததும் சரித்திரத்தின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய சாதனையாகும்.
எதிர்கொண்டு வருகின்ற பெருந்தோட்ட சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு நிலைமை, தொழிற்சங்க நடவடிக்கைகளில் நீதிமன்றத்தின் தலையீடு, தனியார் மயமாக்கல், தோட்டங்களை உபகுத்தகைக்கு விடுதல், வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்தல், தொழிற்சங்கங்களுக்கெதிரான அரச நடவடிக்கைகள், சட்ட அமுலாக்கம், தொழிலாளர்களுக்கான அங்கீகாரம், போக்குவரத்து, தபால் விநியோகம், வீட்டுரிமை, பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் போன்றவை முக்கிய சவால்களாகும்.
இப்பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து தொழிலாளர்களின் சுபீட்சத்துக்கு தொடர்ந்தும் பணியாற்ற எமது சங்கம் உறுதி பூண்டுள்ளது. கடந்த காலங்களில் நாம் ஆற்றிய சிறப்பான சேவையினால் தான் பெரும்பான்மை அங்கத்தவர்களுடன் 50 ஆண்டுகள் பிறந்து பொன்விழா கொண்டாடுகிறோம். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட சக்திக்கு தலைவணங்குகின்றோம்.
அத்துடன், ஆழிப்பேரலையின் போதுகூட பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தற்போதைய பொதுச் செயலாளரின் தலைமையில் சென்ற குழு அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தரத் தீர்வினை எட்ட வேண்டும் என்பதில் இத்தொழிற்சங்கம் உறுதியாகவுள்ளது. மூவின மக்களும் சுபீட்சமாகவும் சமமாகவும் வாழ்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டமோ, மாகாணச் சபைச்சட்டமோ நிரந்தரத் தீர்வினை தராது என்பதில் உறுதியாகவுள்ளது.
இப்பின்னணியில் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் தற்போது நின்று போயிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கும்படி வலியுறுத்துவதில் உற்சாகமான பங்களிப்பை தொழிற்சங்கங்கள் வழங்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளது.
செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டமைக்கான ஊடகங்களான வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடர் ஒளி, சக்தி எப்.எம்., லங்காதீப, டைம்ஸ், பி.பி.ஸி. மற்றும் சூரியன் ஆகியவற்றுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.