வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்து பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உருப்படியான போராட்டமெதையும் முன்னெடுக்க முடியாத நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கு வகை செய்யக்கூடிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க இயலாத நிலையில் எதிரணி விளங்குவது அரசாங்கத் தரப்பினருக்கு ஒரு யோகமாகவே அமைந்திருக்கிறது எனலாம். போரைக் காரணம் காட்டி பொருளாதார நெருக்கடியை பொறுத்தருளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, தொடர்ந்தும் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்படாது என்பதற்கான உத்தரவாதமும் இல்லை. நாளைய பொழுதை எவ்வாறு கழிக்கப்போகின்றோம் என்று அதிகப் பெரும்பான்மையான நாட்டு மக்கள் ஏக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கமும் மக்களின் ஏக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அறிவிப்புகளையே செய்துகொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான எந்தவொரு திட்டமுமே அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை, எதிரணியும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ஒப்பனைத்தனமான எதிர்போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறது.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி மக்கள் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப்போவதாகவும் பிரகடனங்களைச் செய்து வந்திருக்கிறார். ஆனால், மக்களை தனது கட்சியின்பால் அணி திரட்டக்கூடிய அரசியல் அணுகுமுறை அவரிடம் இல்லாதிருக்கும் பரிதாபத்தைக் காண்கிறோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த வருட ஆரம்பத்தில் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவும் காலஞ்சென்ற ஷ்ரீபதி சூரியாராச்சியும் அமைத்த ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் என்ற இயக்கத்தை விக்கிரமசிங்க தோற்றுவித்தார். பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தேசிய காங்கிரஸ் `மக்கள் அலை' போராட்டத்தை முன்னெடுத்து விரைவில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் என்று இவர்கள் அறிவித்தார்கள். நாட்டில் சில பகுதிகளில் மக்கள் அலை பேரணிகளும் நடத்தப்பட்டன. ஆனால், எதிர்பார்த்தளவுக்கு அந்த பேரணிகளில் மக்கள் திரண்டதைக் காணக்கூடியதாக இருக்கவில்லை.
நாளடைவில் மக்கள் அலை இயல்பாகவே அருகிப்போய்விட்டது. இப்போது விக்கிரமசிங்க புதியதொரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஆட்சேபித்து நாடளாவிய ரீதியில் ஐ.தே.க. சுவரொட்டி இயக்கத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் முன்னெடுத்திருக்கிறது. தலைநகர் கொழும்பில் மருதானையில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த படங்கள் நேற்றைய தினம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. சுவரொட்டி இயக்கத்துக்காகக் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய விக்கிரமசிங்க பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை குறைக்க முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டது என்றும் அரசாங்கம் அதன் இயலாமையை ஏற்றுக் கொண்டு உடனடியாகப் பதவி விலகாவிட்டால் மக்கள் போராட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப் போவதாகவும் எச்சரிக்கை செய்திருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிரான தனது ஒவ்வொரு போராட்ட இயக்கத்தின் ஆரம்பத்திலும் விரைவில் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போவதாக விக்கிரமசிங்க கூறிவந்திருக்கிறார். ஆனால், அவர் ஒருபோதும் வெகுசனப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. தற்போதைய சுவரொட்டி இயக்கமும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு மென்மையான போராட்ட அறிவிப்பொன்றைத் தான் விக்கிரமசிங்கவிடம் இருந்து எதிர்ப்பார்க்கக் கூடியதாக இருக்கும். இலங்கை அரசியலில் இன்று காணப்படக் கூடிய விசித்திரமான ஒரு அம்சம் என்னவென்றால், அரசாங்கம் பெரும் பலமுடையதாக இல்லாவிட்டாலும் எதிரணியின் பலவீனங்களினால் அது தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடிகிறது. விக்கிரமசிங்கவின் சுவரொட்டிப் போராட்ட இயக்கம் பிரதான எதிரணியின் பலவீனமான அரசியல் தந்திரோபாயத்தின் தெளிவான வெளிப்பாடு ஆகும்!