*3 படையினர் பலி
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி உட்பட 3 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
நாளை மறுதினம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஆயிரக் கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் பாஜர் என்ற இடத்தில் இராணுவ முகாம் உள்ளது. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை ரோந்துப் பணியை முடித்து வீரர்கள் முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது மாமூத் என்ற இடத்தில் வீதியோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் இராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூர இருந்து இயக்கும் கருவி மூலம் இந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் ஆதரவு தீவிரவாதிகள்தான் இந்த மாதிரியான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பழங்குடிகள் அதிகமாக வாழும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் பெப்ரவரி 18 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையகம் புதன்கிழமை அறிவித்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளதால் அங்கு தேர்தலை நடத்த முடியாது எனவும் ஆணையகம் அறிவித்துள்ளது.
தலிபான் ஆதரவு தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி பாஜர் ஆகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மதரஸா மாணவர்கள் மீது இவர்கள் ரொக்கெட் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.