* முஷாரப் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி முஷாரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தேசிய நூலகம் ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடைபெறும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானில் எதிர்கால ஜனநாயகம் இந்தத் தேர்தலில் தான் தங்கியுள்ளது.
மோசடிகள் இந்தத் தேர்தலில் அதிகமாக இருக்குமென்று சில கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. தோல்வியடைந்தால் அதற்குக் காரணம் கூற இப்போதே அக்கட்சிகள் தயார்படுத்திக் கொள்கின்றன.
கள்ளவாக்கு போடப்படுவதாக தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பிறகோ யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. கடும் நடவடிக்கையெடுக்கும்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேவைகளும் கருத்து கூறுகின்றன. அது சரியாக இருக்காது.
தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பதன் மூலம் பாகிஸ்தானில் கலவரத்தை உண்டாக்காதீர். தேர்தலை அமைதியாக நடக்கவிடுங்கள். முடிவு மக்கள் கையில் உள்ளது.
தேர்தலுக்குப் பிறகு உருவாகும் ஜனநாயக அரசு பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.