வாஷிங்டன்:அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரியால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் பலியானதுடன், 16 பேர் காயமடைந்த அதேவேளை, துப்பாக்கிதாரியும் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
சிக்காகோவின் மேற்குப் பகுதியிலுள்ள டீ கால்ப் பகுதியிலுள்ள வடக்கு இலித்ய்ஸ் பல்கலைக்கழகத்திலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் அப்பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பாட விரிவுரை மண்டபத்துக்குள் நுழைந்த ஆயுததாரி அங்கிருந்த மாணவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஒருவரே தன்னை மறைக்கக்கூடியவாறாக கறுப்புடை அணிந்ததுடன், இரு கைகளிலும் துப்பாக்கியுடன் விரிவுரை மண்டபத்துள் அத்துமீறி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தாம் வருகை தருவதற்கு முன்னரேயே ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆயுததாரியின் இரண்டு துப்பாக்கிகளை இதுவரை நடத்திய தேடுதல்கள் மூலம் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் மூன்றாவது துப்பாக்கியை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவியல்துறையின் முன்னாள் பட்டதாரி மாணவனே இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சில பெண்கள் கண் பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், சிலர் கால் மற்றும் தலைப் பகுதிகளில் காயமடைந்துள்ளனர்.
கடந்த 10 மாதங்களின் முன்னர் வேர்ஜினியப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 32 பேர் பலியானதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய பல்கலைக்கழகமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இவ்வாரத்தில் அமெரிக்காவின் கல்வித்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடந்த நான்காவது சூட்டுச் சம்பவம் இதுவெனக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் நிகழ்கின்றபோது விரிவுரை மண்படத்தில் இருந்த மாணவர் ஒருவர் இச் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில்;
எமது வகுப்பில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அன்றைய விரிவுரைகள் நிகழ்ந்துகொண்டிருந்த சமயம், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக்கொண்டே ஆயுததாரி உள்நுழைந்தார்.
பின்னர் மண்டபத்தின் நடுவில் இருந்த மாணவர்களை நோக்கிச் சுட்டதைத் தொடர்ந்து விரிவுரையாளரைத் தாக்குவதற்காக அவரை நோக்கிச் சென்றாரெனத் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் இஸ்வாகீ சமூக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.