*நீர்வழங்கல் அமைச்சர் மகிந்த அமரவீர
தண்ணீர் பொன்னுக்கு சமன் என்ற தத்துவ வார்த்தையை மறந்து பெரும்பாலானவர்கள் அதனை வீண்விரயம் செய்கின்றனர் என்று நீர் வழங்கல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மீகஸ் ஆரப்பகுதியில் சமூக குடிநீர் விநியோகத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தண்ணீர் இன்றி பலர் கஷ்டப்படுகின்றனர். ஆனால், எம்மில் சிலர் தண்ணீரை வீணாக பயன்படுத்துகின்றனர். தண்ணிருக்காக பல மைல் தூரம் அலைகின்றனர். இதனை நாம் சிந்திக்க வேண்டும்.
சில இடங்களில் குழாய் நீர் வீணாக ஓடிக் கொண்டிருக்கும் ஆனால், ஒருவரும் அதனை நிறுத்தமாட்டார்கள். அதனைக் காணாதமாதிரிப் போவார்கள்.
தண்ணீரை வீணாக்கினால் எரிபொருள், மின்சாரம் போன்று தண்ணீரைப் பெற வேண்டிய நிலைமை ஏற்படும்.
உலகில் சுத்தமான நீருக்குப் பெரும் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் ஏற்படத் தொங்கியுள்ளது. அதனால் எதிர்காலத்தில் நாம் கூடிய விலைக்கு தண்ணீரைப் பெறவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இன்றிலிருந்தே தண்ணீரை நாம் வீண் விரயம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வரவேண்டும்.
குழாயில் வெடிப்பேற்பட்டு அல்லது சேதம் ஏற்பட்டு நீர் வீதியெங்கும் விரயமாகும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தால் இரண்டு நாட்களின் பின்னரே வந்து திருத்தம் செய்கின்றனர்.
இதனால், ஆயிரக்கணக்கான கலன் தண்ணீர் விரயமாகிறது. அதனால் போக்குவரவும் பாதிக்கப்படுகிறது. அந்த அதிகாரிகள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
வீதியோரமாகவுள்ள குழாய் நீர்க்குழாய்களில் இருந்து நீரைப்பெற்று சிலர் வாகனங்களைக் கழுவுகின்றனர். இதனை காலையும் மாலையுமே செய்கின்றனர்.
இவ்வாறான செயல் எமது நாட்டில்தான் நிகழ்கிறது. எமது நாட்டைப்போல தண்ணீரை வீண்விரயம் செய்யும்நாடு உலகில் எதுவுமேயில்லை.
இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
எமது நாட்டில் தாராளமான நீர்வளம் உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் நீர்ப்பற்றாக்குரை ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைச் சமாளிக்க இப்பொழுதிலிருந்தே நாம் தண்ணீரை வீணாக்காது செயற்பட்டு வரவேண்டும்.
எதிர்காலத்தில் ஒரு லீற்றர் பாலின் விலையை விட ஒரு லீற்றர் நீரின் விலை கூடுதலாக ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.