திருகோணமலை மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டில், முதல் 45 தினங்களில் மூன்று பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நேற்றுவரை திருகோணமலையில் 34 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேரே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 49 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்தனர். எனினும் எவரும் மரணமடையவில்லை. 2006 ஆம் ஆண்டில் 36 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கே மரணம் சம்பவித்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு பிறந்து முதல் 45 தினங்களில் மூன்று பேர் உயிரிழந்தமை பொதுச் சுகாதாரத்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நகர வீதிகள் தோறும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளை அழிப்பதற்காக கிருமிநாசினிப் புகையை விசிறும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். புதிய ஆண்டில் அடிக்கடி மழை பெய்தால் குட்டைகளில் தேங்கி நிற்கும் நீர் டெங்கு நுளம்பு பரவுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
வீடுகளில் காணப்படும் வெற்றுப் போத்தல்கள், சிரட்டைகள் மற்றும் மழை நீர் தேங்குவதற்கு உதவும் பொருட்களை வீடு வீடாகச் சென்று அகற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.