விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்து பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாடசாலைக்கு வருகின்ற மாணவ மாணவிகளின் புத்தகப்பைகள் சோதனையிடப்படுகின்றன.
பாடசாலை மாணவர் தலைவர்கள் சில பாடசாலைகளிலும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சில பாடசாலைகளிலும் இந்தச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வியமைச்சின் அனுமதியுடனும் பொலிஸாரின் ஒத்துழைப்புடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், தென் மாகாணத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள், ஆசிரியைகளின் பொதிகள், கைப்பைகளையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு சில ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இந்த சோதனைக்கு மறுப்பும் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் குண்டுகளை பாடசாலைக்குள் கொண்டு வருவதாக சந்தேகிப்பதால் மாணவர்கள் தம்மை மதிக்கமாட்டார்கள் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைக்குள் எவர் வந்தாலும் சோதனையிடப்பட வேண்டும் என பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களையும் சோதனையிட வேண்டும் என பாதுகாப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன.