யாழ். மாவட்டத்தில் சுதேச வைத்தியத்துறை அமைச்சு, விடுதிவசதிகளுடன் கூடிய இரு ஆயுர்வேத வைத்தியசாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இவ்வைத்தியசாலைகளை பருத்தித்துறையிலும் பண்டத்தரிப்பிலும் நிறுவுவதற்கான முதற்கட்ட மதிப்பீட்டுத்திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு மாகாண அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது யாழ். மாவட்டத்தில் கைதடி ஆயுர்வேத சித்த வைத்திய வைத்தியசாலை இயக்குகின்றபோதும் இங்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மட்டுமே இயங்கி வருகிறது.
இதேவேளை, யாழ். மாவட்டத்திலே ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான மருந்துவகைகளை உள்ளூரிலே தயாரிப்பதற்கு குடாநாட்டில் மூலிகைத் தோட்டமொன்றை அமைப்பதற்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சு நிதிவளங்களை வழங்கவுள்ளது. சில மருந்து வகைகள் உள்ளூரிலே தயாரிக்கவும் அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.