யாழ். குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு கடந்த மாதங்களுக்குரிய உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மொஹமட் இமாம் மீள்குடியேற்ற அமைச்சுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே நிவாரணத்தை மீண்டும் துரிதமாக வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம் மக்களின் உள்ளூர் பிரதிநிதிகள் தமக்கு உலருணவு நிவாரணம் வழங்கப்படாமையால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இமாம் எம்.பி.யின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன் உலருணவு நிவாரணத்தை உடனடியாக பெற்றுத் தருமாறும் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்தே கடந்த மாதங்களுக்கான உலருணவு நிவாரணத்தை யாழ் முஸ்லிம் மக்கள் துரிதமாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே சமயம் பாணந்துறை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ் முஸ்லிம் மக்களுக்கான உலருணவு நிவாரணங்களை உரியவர்களுடன் பேசி பெற்றுக் கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இமாம் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.