குடிநீர் விநியோகத்துக்கென புத்தளம் பகுதி மக்களிடம் ஒரு தொகைப் பணமும், அங்கு இடம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வேறொரு தொகைப் பணமும் அறவிடப்படுவதாக அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரபட்சமான இக்கட்டண அறவீடு குறித்து புத்தளம் நகர மேயர் ஏ.ஒ.அலிகான் அமைச்சரின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்ததை அடுத்து, நீர்விநியோக வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் இதற்கென சீரான ஒரு கட்டண அறவீட்டை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
முறைகேடான இக்கட்டண அறவீடு தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்;
மதீனா நகர், சோல்ட்டன், வேப்பமடு மற்றும் தம்பபண்ணி ஆகிய பிரதேசங்களிலுள்ள முகாம்களில் வசிக்கும் மக்களிடம் குறைவான நீர் விநியோக் கட்டணமும் இப்பகுதிகளை அண்மித்து வாழும் உள்ளூர் மக்களிடம் கூடுதலான நீர் விநியோகக் கட்டணமும் அறவிடப்பட்டு வந்தது.
கடந்த பதினேழு வருடங்களாக புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்துவரும் இவ்விரு சாராரிடமும் இந்த ஏற்றத் தாழ்வான நீர் விநியோக கட்டண அறவீடு பெரும் விசனத்தை தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் யுனிசெப் பிரதிநிதிகளுடனும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுடனும் இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிணங்க இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் மக்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் ஒரே அளவிலான தொகையை நீர்விநியோகக் கட்டணமாக அறவிடுவதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.