யாழ். மாவட்டத்தின் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் வடவலய பதிவாளர் நாயக திணைக்களத்தினால் யுத்தச் சூழ்நிலைகளால் பதிவுகள் மேற்கொள்ளப்படாத பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவுகள் காலம்கடந்த பதிவுகளாக மேற்கொள்ளப்பட்டன. இப் பணி திருப்திகரமான பலனைத் தந்துள்ளதாக, வடவலய உதவிப்பதிவாளர் நாயகம் திருமதி ம. இராசரட்ணம் தெரிவித்துள்ளார்.
இப்பணி பதிவாளர் நாயக திணைக்களத்தின் வடவலய உதவிப் பதிவாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பிரதேச செயலகங்களில் நடமாடும் சேவைத் திட்டத்தின் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சேவையின் மூலம் 1382 காலம்கடந்த பிறப்பு பதிவுகளும் 354 காலம்கடந்த இறப்புப் பதிவுகளும் 1736 பிறப்புச் சான்றிதழ் திருத்தங்களும் 769 அற்றோளிப் பிரிவுகளும் 22 மகவேற்புச் சம்பந்தமான பதிவுகளும் 38 காணாமற்போனோர் தொடர்பான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வடவலய உதவிப் பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செயல் திட்டம் கடந்த மூன்று மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளது. பதிவுகளை மேற்கொண்டோர், பாடசாலைகளில் பிறப்புச் சான்றிதழ் இன்றி பட்ட கஷ்டங்கள் நீங்கியிருப்பதுடன், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றை பெறுவதற்கு வசதி கிட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.