மட்டக்களப்பு, புகையிரத நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் இரவு ரயில் அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பை வந்தடைகிறது. அதேசமயம், திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரும் பயணிகளும் இதே ரயிலில் கல்ஓயாவில் வைத்து இணைகின்றனர்.
எனினும், மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கல்முனைக்கு ஒரு பஸ்ஸும் அக்கரைப்பற்றுக்கு ஒரு பஸ்ஸுமே சேவையில் ஈடுபடுகின்றன. இதனால், பஸ்ஸில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ரயில் நின்றதும் பயணிகள் முண்டியடித்து ஓடும் நிலையைக் காணக் கூடியதாகவுள்ளது.
ரயில் நிலையத்தில் ரிக்கட் பரிசோதகரையும் கூட தள்ளிவிட்டுப் பலர் ஓடிவிடுவதாகக் கூறப்படுகின்றது. இயலுமானவர்கள் ஓடிச்சென்று பஸ்ஸில் சீட் பிடிக்க, இயலாதவர்கள் பஸ்ஸில் இடம் கிடைக்காது விடியும் வரை காத்திருக்கும் நிலையும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே,இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபையும் மட்டக்களப்பு பஸ் டிப்போவும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.