தலவாக்கலை லெமலியர் தோட்டத்திலிருந்து பதுளை ஸ்பிறிங்வெலி முதலாம் பிரிவு தோட்டத்தில் வந்து தங்கியிருந்த பெண்ணொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதுடன், அப்பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பதுளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சத்தியவாணி என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளதுடன், எம்.சிகாமணி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பாகத் தெரியவருவதாவது. தலவாக்கலை லெமலியர் தோட்டத்திலிருந்து பதுளை ஸ்பிறிங்வெலி முதலாம் தோட்டத்திற்கு எம்.சிகாமணி என்பவர் எஸ்.சத்தியவாணி என்ற இளம் பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து இளைஞனின் சிறிய தந்தையின் குடியிருப்பின் ஒரு பகுதியில் தங்கியிருந்தார்.
ஐந்து தினங்களுக்கு முன்வந்த இவர்கள் தங்கியிருந்த அறைக்கதவினை உடைத்து உட்புகுந்த இனந்தெரியாத சிலர் குறிப்பிட்ட இருவரையும் வாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கும் பதுளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.