திருமலை மாவட்டத்தின் 24 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் மக்கள் எவரும் தமது வசிப்பிடத்தை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடித்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள திருகோணமலை மாவட்டம் தொடர்பான ஆரம்ப அறிக்கையிலேயே இவ்விபரம் தெரிய வந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சனத்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கையினை குடித்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தற்சமயம் மாவட்ட ரீதியாக வெளியிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றுள் 24 பிரிவுகளில் மக்கள் யாரும் இல்லை. அவர்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர் என்ற விபரமும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மூதூரில் - 11, சேருவிலவில் - 4, வெருகலில் - 3, குச்சவெளியில் - 2, மொரவெவயில் - 2, கிண்ணியாவில் - 1, மரங்கடவெலயில் - 1 என்பனவே அந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுமாகும். குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிமக்கள் எவரும் இல்லாத கிராமங்கள் பற்றிய விபரத்தில்,
மூதூர் - சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், சம்பூர் கிழக்கு, கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான் வடக்கு, கட்டைபறிச்சான் தெற்கு, பள்ளிக்குடியிருப்பு, சேனையூர், பாட்டாளிபுரம், நல்லூர்.
சேருவில - அரியமாங்கேணி, உப்பூறல், சுமேதகன்புர, மகிந்தபுர.
வெருகல் - இலங்கை முகத்துவாரம், பூமரத்தடிச்சேனை, இலங்கைத்துறை.
குச்சவெளி - தென்னைமரவாடி, கல்லம்பத்தை.
மொரவெவ - மொரவெவ வடக்கு, கித்துல் ஊத்துவ.
கிண்ணியா - உப்பாறு
கோமரங்கடவெல - மைலவெவ ஆகிய கிராமங்களே இவ்வாறு மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த நிலையில் அவை வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.