*அமைச்சர் அருள்சாமி தெரிவிப்பு
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே மலையக பெருந்தோட்டப்புற மாணவர்களின் கல்வி பின்னடைவிற்கு பிரதான காரணம் என்று மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்தார்.
அண்மையில் ஹைபொரஸ்ட் இலக்கம் 3 ஆம் தோட்டப்பிரிவில் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷ்ரீ ஷ்ரீ பாலர் பாடசாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது;
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் `அ' என்ற எழுத்துகூட எழுதுவதில் மிகவும் சிரமமடைகின்றனர். இந்நிலையில் இம்மாணவர்களது ஆரம்பக்கல்வி முதலாம் தரத்திலேயே ஆரம்பமாகின்றது.
இதனால், இம்மாணவர்கள் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை, பல்கலைக்கழக கல்வி போன்றவற்றில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஆனால், இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள் தங்களது பிள்ளைகளை ஆரம்பக் கல்வியில் அக்கறை எடுத்து ஆங்காங்கே பாலர் பாடசாலைகளை உருவாக்கி, கல்வி வளர்ச்சிக்கான அத்திவாரத்தை உரிய முறையில் இடுகின்றனர். இந்த வாய்ப்பு எமது சமூகத்திற்கு கிடைப்பதில்லை.
எனவே, ஷ்ரீ ரவிசங்கரினால் நடத்தப்படும் வாழும் கலைப் பயிற்சி நிலையம் இவ்வாறான பாலர் பாடசாலைகளை தோட்டப்புறங்களில் உருவாக்குவது தோட்டப்புற மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் இடும் நல்லதொரு காரியமாகவே அமைகின்றது.
இதுபோன்ற முன்மாதிரியான செயல்களை மலையகத்திலுள்ள ஆன்மீக மன்றங்கள், மதநிறுவனங்கள், இவ்வாறான பாலர் பாடசாலைகளை உருவாக்கி பெருந்தோட்டப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரம் இடவேண்டியது அவசியமாகும்.
மலையக மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுபவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலை மாற்றம் பெற வேண்டும்.
மலையக மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைக்க முடியும். எனவே, வெறுமனே சம்பிரதாயமாக உருவாக்கப்படும் அரசியல் தொழிற்சங்க கோட்பாடுகள் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை மலையக மக்களின் 187 ஆண்டு லய வாழ்க்கை நிரூபித்துள்ளது.
ஆகவே, பெற்றோர்கள் எதிர்கால சமூகத்தை ஒரு கல்விசார் சமூகமாக மாற்றுவதற்கு முன்நின்று செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.