தென்மாகாண சபையின் 41 உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக ஜே.வி.பி. உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சபைக் கூட்டத்தில் கண்டித்துப் பேசியதையடுத்து, கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தென்மாகாண சபையில் உள்ள 55 உறுப்பினர்களில் 12 ஜே.வி.பி. உறுப்பினர்களும் இரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுமே நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏனைய 41 உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், நேற்றைய கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லை.
இந்த உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணம் வீணானது என்றும் அவர்கள் வெளிநாட்டில் மது அருந்தி உல்லாசமாகக் காலத்தை கழிப்பதற்கும் பொழுதுபோக்குவதற்குமே இவர்களின் இந்தச் சுற்றுலா அமைந்துள்ளது என ஜே.வி.பி. உறுப்பினர்கள் கண்டித்துப் பேசினார்கள்.
நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது இவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம்தான் முக்கியமானதா எனவும் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு உறுப்பினரின் இப்பயணத்துக்கு 3, 1/2 லட்சம் ரூபா செலவாகிறது. இப்பயணத்தை பல அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். சபையின் பணம் இந்த உறுப்பினர்களாலேயே வீண் விரயம் செய்யப்படுகிறது எனவும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், சபையின் செங்கோலையும் அவர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இதனால் சபைக்குத் தலைமை தாங்கிய உப அக்கிராசனர் விஜயதசநாயக்க சபையை ஒத்திவைத்தார்.
சபை மண்டபத்தை விட்டு வெளியே வந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களிடம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்; தென் மாகாணத்தில் பல அபிவிருத்திப் பணிகளை செய்ய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை ஐ.தே.க. மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
தேர்தலில் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் மக்களின் பணத்தில் உலகம் சுற்றி மகிழ்கிறார்கள். அடுத்த தென் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றனர்.