கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டொக்லண்ட் சந்தியில் வீதியோரமாகவுள்ள நடைபாதையில் அநாதரவாயிருந்த மோட்டார் சைக்கிளாலேயே இந்த நீண்டநேரப் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்படி மோட்டார் சைக்கிள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே நேற்றுக் காலை 9 மணியளவில் இந்தப் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து டொக்லண்ட் சந்தியை நோக்கி வரும் வீதிகளை மூடியதுடன், அப் பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடுமாறும் பொதுமக்களை அகன்று செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
இதன்பின் மோட்டார் சைக்கிளை தீவிர பரிசோதனைக்குட்படுத்திய பொலிஸார், சந்தேகத்துக்கிடமான எதுவும் மோட்டார் சைக்கிளில் இல்லாததால் அந்த மோட்டார் சைக்கிளை முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதையடுத்து பரபரப்பு நீங்கியது.
இதன் பின்னர் அப்பகுதியூடாக வழமை போன்று போக்குவரத்துகள் நடைபெற்ற அதேவேளை, அப்பகுதியிலுள்ள கடைகளும் திறக்கப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள் அப்பகுதியிலுள்ள சீமெந்து நிறுவனத்துக்கு வந்த ஒருவருடையதெனத் தெரியவந்தது.