*முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்
-டிட்டோகுகன்-
ஜே.வி.பி.யினருக்கு 80களின் பிற்பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் ஆயுதத் தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் புலிகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்ததாகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு பிரதான மாவட்ட நீதிவான் சிசிர ரத்னாயக்க முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி இவ்வாறு சாட்சியமளித்திருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வொன்றில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த விமலசிறி பெரேரா என்பவரே இவ்வாறு சாட்சியமளித்திருக்கிறார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்கான நட்டஈடாக விமல் வீரவன்ச தனக்கு 5 கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்றும் வசந்த பெரேரா தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை பிரதான மாவட்ட நீதிவான் சிசிர ரத்னாயக்க முன்னிலையில் எடுத்துக்கொண்டபோது சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் பெரேரா, 88/89 காலப் பகுதிகளில் தான் காலி மாவட்ட இணைப்பாளராகவும் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியபோது ஜே.வி.பி.யினரின் வன்முறை நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்க செயற்பட்டதுடன் அவை தொடர்பாக அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், ஜே.வி.பி.யினருக்கு புலிகளுடன் ஆயுதத் தொடர்புகள் இருந்ததுடன், அவர்கள் புலிகளிடமிருந்து அம்பாந்தோட்டை வழியாக ஆயுதங்களை பெற்றிருந்ததாகவும் அவற்றை தடுக்கத் தான் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் சாட்சியமளித்திருக்கிறார்.
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ரெலிகொம் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் அதன் பின்னர் முதலீட்டு சபையில் பணிப்பாளராகவும் தான் பணிபுரிந்தபோதிலும் விமல் வீரவன்ச தொலைக்காட்சி மூலம் தன் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளினால் தான் செய்து வந்த தொழிலையும் (முதலீட்டு சபை பணிப்பாளர்) இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் பெரேரா மாவட்ட நீதிவான் முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்.
இதேநேரம், விமல் வீரவன்ச தெரிவித்திருப்பது போல் தான் எந்த அரசியல் செல்வாக்கிலும் அந்தப் பதவிக்கு வரவில்லையென்றும் அவர் மன்றில் சாட்சியமளித்திருக்கிறார்.
மேஜர் ஜெனரல் பெரேரா சாட்சியமளிக்கும்போது விமல் வீரவன்ச எம்.பி.யும் மன்றில் ஆஜராகியிருந்துள்ளார்.