*பழ.நெடுமாறன் கேள்வி
சென்னை: பலஸ்தீன மக்களுக்கு உதவ துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் இந்தப் போக்கை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், அந்த மக்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருள்களை அளிக்க தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
ஆனால், இலங்கை அரசால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ இந்திய அரசோ, தமிழக அரசோ முன்வரவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் உதவுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பொருள்களை அனுப்புவதற்கு உதவுவதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முன்வரவில்லை.
பலஸ்தீன மக்களுக்கு ஒரு நீதியும இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியும் வழங்கும் மத்திய, மாநில அரசுகளின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.