*பொலிஸ் மா அதிபருக்கு மனைவி கடிதம்
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணம் குறித்து முழுமையானதும் பக்கச்சார்பில்லாததுமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமெனக் கோரி அவரது பாரியாரான தில்ருக்ஷி சூரியாராச்சி பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
14 ஆம் திகதியிட்டே இந்தக் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களால் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணம் குறித்து குடும்ப உறவினர்களுக்கும் நெருங்கிய நட்புடையவர்களுக்கும் பலத்த சந்தேகம் எழுந்திருப்பதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அத்துடன், தனது கணவர் ஒரு வருடத்துக்கு முன்னர் அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியினால் விலக்கப்பட்டதன் பின்னர் "மிக்-27" ரக விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், விடுதலைப் புலிகளுடனான இரகசிய ஒப்பந்தம் போன்ற விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
ஸ்ரீபதி எப்போதும் ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுத்ததுடன் இந்த நாட்டு பிரஜைகளின் உரிமைகளுக்காகவும் நல்லாட்சிக்காகவுமே போராடியிருந்தார்.
இதனால் ஸ்ரீபதிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலமும் கடிதங்கள் ஊடாகவும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டேயிருந்தன.
எனவே, ஸ்ரீபதி சூரியாராச்சி உள்ளிட்ட நால்வருக்கு மரணத்தை விளைவித்த வாகன விபத்து தொடர்பாக தற்போது பிரதேச மட்டத்திலான விசாரணைகளே நடத்தப்படுகின்றன. இதில் எமக்கு திருப்திடைய முடியாது. ஆகவே, விசேட பொலிஸ் குழுவொன்றை நியமித்து முழுமையானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் சூரியாராச்சியின் பாரியாரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.