*அநுராதபுர பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு
தோல்வியடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கும் விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்த முற்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலேயே மாவட்டம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என மின்சக்தி, எரிசக்தித் துறை அமைச்சரும் மாவட்ட மட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் தேசிய அமைப்பாளருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுவினை அமைக்கும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை அநுராதபுரம் மத்திய வங்கி கேட்போர்கூடத்தில் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
"பொதுமக்களை இலக்குவைத்து பல தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்திவிட்டார்கள். இராணுவத்தினரின் கவனத்தை திசைதிருப்பி வன்னி மீதான தாக்குதலை நிறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறான தாக்குதல்களினால் பாதிக்கப்படுவது இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகத்தவர்களுமே.
பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்துநிறுத்துவதற்கு முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. தற்போது பொதுமக்கள் விழிப்படைந்துள்ளார்கள் என்பது கடந்த காலங்களில் அவர்கள் வழங்கிய தகவல்கள் மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பல தோல்வியடைந்ததிலிருந்து தெளிவாகின்றது.
சக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகள் மற்றும் நேரக்கணிப்புக் குண்டுகள் பலவற்றை கண்டுபிடித்து உதவி இந்நாட்டின் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள முன்னூறு இளைஞர்கள் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவர். இன, மத மற்றும் கட்சிப் பாகுபாடின்றியே இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் வேளையில் இவர்களது உதவியைப் பொலிஸார் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் ஒவ்வொரு கணினி வழங்கப்பட்டு பொலிஸ் நிலையப் பகுதியில் வாழும் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு பதிந்து வைக்கப்படும். இதற்கு கணினி அறிவு உள்ள இளைஞர் ஒருவரும் பொலிஸ் நிலையங்கள் தோறும் நியமிக்கப்படுவர்" என்றார்.
இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க, வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பீ.பீ.பத்திரன, சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் சிரிசேன ஹேரத், சிவில் பாதுகாப்பு அணியின் பணிப்பாளர் ஜெனரல் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுள்கனே, தேச நிர்மாணத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க உட்பட நகரசபை, பிரதேச சபை தலைவர்களும் பங்கு பற்றினர்.