Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ
[16 - February - 2008] [Font Size - A - A - A]
* எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார்.

கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள சுதந்திரப் பிரகடனத்திற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துவருகின்றன.

ஆனால், ரஷ்யா கொசோவோவின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருவதுடன் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஆதரவளிப்பது ஏனைய பிரிவினைவாத அமைப்புகளுக்கு பச்சை விளக்கு காட்டுவதாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றது.

கொசோவோவாவின் சுதந்திரத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இப்போது இலங்கையும் சேர்ந்துள்ளது.

இது குறித்து வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தினக்குரலுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையில்;

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஒருபோதும் இலங்கை ஆதரிக்கப்போவதில்லை. அதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இலங்கை ஆதரவளிக்குமா என்பது கேட்கப்படவேண்டிய பெறுமதியான கேள்வியும் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், கொசோவோவின் உத்தேச தனிநாட்டுப் பிரகடனத்திற்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை தெரிவித்துவரும் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக்குடன் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அண்மையில் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொசோவோவின் இந்த நகர்வினால் இலங்கை அடைந்துள்ள கவலை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.

தமது தனிநாட்டுப் பிரகடனத்துக்கு 100 நாடுகள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொசோவோ மாகாணத்தின் (தற்போது சேர்பியாவின் மாகாணம்) முதல் அமைச்சர் அண்மையில் உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடன நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்குமாறு நேற்று வலியுறுத்தியிருக்கும் சேர்பிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமிக், கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை தடுத்துநிறுத்துவதற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லையெனவும் பாதுகாப்புச் சபை இது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சு நடத்த வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். அத்துடன், இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியை ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் தொடர வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகியன கொசோவோ தனது விதியை தானே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஐ.நா. தலைமையகத்திலுள்ள பி.பி.சி. நிருபர் மாட்வெல்ஸ் கூறியுள்ளார். சுதந்திர நாடாக கொசோவோ பிரகடனம் செய்தால் அதனை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து உறுப்பு நாடுகள் தனித்தனியாக முடிவுசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கருதுகின்றன.

கொசோவோவின் விடயத்தில் ஐ.நா. இனிமேல் பங்களிப்பு வழங்குவதற்கு எதுவும் இல்லையெனவும் ஏற்கனவே ஐ.நா. தூதுக்குழு அங்கு கொசோவோவில் நிலைகொண்டுள்ளதாகவும் அதன் எதிர்கால நிகழ்வுகளை பார்ப்பதற்காகவே அங்கு அதாவது ஐ.நா. தூதுக்குழு நிலை கொண்டிருப்பதாகவும் இந்த நாடுகள் கருதுகின்றன.

1999 இல் நேட்டோவின் தாக்குதலையடுத்து சேர்பியப் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின் ஐ.நா.வே கொசோவோவை நிர்வகித்து வருகிறது.

கொசோவோ மாகாணத்தில் அல்பேனிய பெரும்பான்மை இனம் மீது சேர்பிய படைகள் மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், கொடுமைகளையடுத்தே இந்த நடவடிக்கையை நேட்டோ மேற்கொண்டது.

இதேவேளை, இவ்வார இறுதியில் கொசோவோவிற்கான சிவிலியன் பொலிஸ் மற்றும் நீதித்துறையை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஏற்படுத்திக் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முற்பகுதியில் விசேட கலகத்தடுப்புப் பிரிவினர் உட்பட 1500 பொலிஸாரும் 250 நீதிவான்கள், சட்டத்தரணிகள் , சுங்க அதிகாரிகளும் அங்கு நிலை நிறுத்தப்படுவார்களெனவும் சுதந்திரப் பிரகடனம் செய்யவுள்ள கொசோவோவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி கருத்து

கொசோவோவின் உத்தேசப் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அவ்வாறு பிரகடனம் செய்வது சட்ட ரீதியற்றதும் தார்மீக நெறிப் பிறழ்வானதும் என்று சாடியுள்ளார்.

அத்துடன் சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வதை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கைக்காக அதாவது இரட்டைத்தன்மையான செயற்பாட்டுக்காக வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரெம்ளினில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் 40 வருடங்களாக வட சைப்பிரஸ் நடைமுறையில் சுதந்திரமான நாடாக உள்ளது. அதனை ஏன் அங்கீகரிக்கவில்லை? இதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா? ஐரோப்பியர்கள் இரட்டைத் தன்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com