*அணி பாதிக்கப்படுமென்கிறார் கபில்தேவ்
கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுகளுக்கு போதிய பண உதவிகள் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்தின் மூலம் அவர்களுக்கு உதவுங்கள் என முன்னாள் இந்திய கப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்திய வீரர்கள் காயமடைவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ஷ்ரீசாந்த், முனாப் பங்கேற்கவில்லை. இத்தொடரின் போதே சகிர்ஹான் மற்றும் ஆர்.பி.சிங் காயமடைந்து வெளியேறினர். இவர்கள் தற்போதைய முக்கோண ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இப்படி இளம் இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருவது வேதனையளிக்கிறது என்கிறார் முன்னாள் இந்தியக் கப்டனும், தற்போது ஐ.சி.எல். அமைப்பின் தலைவராகவும் இருக்கும் கபில்தேவ்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணி வீரர்களை தங்களால் விரைவில் வெளியேற்ற முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து தங்களது தகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் உடற்தகுதியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அப்போது தான் காயத்தில் இருந்து தப்பிக்க முடியும். தாங்கள் காயமடைந்தால் அணி பாதிக்கப்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல காலமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார்கள். ஒரு வீரர் சிறந்த தகுதியில் இருக்கும்போது காயமடைந்தால் அது அவரது அணியையும் பாதிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக எனக்கு பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து பல மாதங்கள் காயத்தால் அவதிப்படும் நிலைமை ஏற்படவில்லை.
யுவராஜ் சமீபகாலமாக சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மை தான். அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பளிக்க வேண்டும். அணியில் திறமைக்கு அதிக மதிப்புக் கொடுக்க வேண்டும். ஒரு வீரருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றால் அவர் மற்றொருவரின் இடத்தை பிடித்துள்ளார் என்பதை நினைவில் வைத்து பொறுப்புடன் விளையாடுவது அவசியம். சிறப்பாக விளையாடும் வீரர்களை யாரும் நீக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ)க்கு அதிக பணம் இருக்கிறது. ஆனால், விளையாடுவதற்கு பணம் முக்கியமல்ல. கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுகளுக்கு போதிய "பணஉதவிகள்" கிடைப்பதில்லை. இருந்தாலும் ஆர்வம் மற்றும் விளையாட்டின் மீதுள்ள காதல் தான் இன்னும் பல விளையாட்டுகளை அழியாமல் காத்து வருகிறது. அதற்காக கிரிக்கெட்டில் பணத்தை செலவு செய்யக்கூடாது என சொல்லவில்லை. கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் பணத்தில் 10 சதவிகிதத்தை மற்ற விளையாட்டுகளுக்கும் செலவிட வேண்டும். இதனால், இந்திய விளையாட்டுத் துறை நல்ல வளர்ச்சியடையும்.