பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தருக்கு போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்படலாமென பி.சி.பி.தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். ருவென்ரி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணியில் இடம்பிடித்த இவர் சகவீரர் ஆசிப்பை துடுப்பால் தாக்கினார். இதையடுத்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு உடனடியாக நாடு திரும்பினார். பாகிஸ்தான் அணியின் தேசிய வீரர்களுக்கான ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.
தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பென்டாங்குலர் தொடரில் மத்திய அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடரில் பந்தின் தரம் சரியில்லை. தனது அணி பங்கேற்கும் போட்டியில் ஆடுகளம் மோசமாக இருக்கிறது என வரிசையாகக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பி.சி.பி. அக்தரை விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், அக்தர் தான் பி.சி.பி.யின் தேசிய வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இதனால், நான் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை என அதிரடியாகத் தெரிவித்திருந்தார்.
விரைவில் விளக்கமளிக்காவிட்டால் அவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என பி.சி.பி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;
அக்தர் வரம்பு மீறி செயற்பட்டு வருகிறார். சபைக்கு எதிராகப் பேசி வருகிறார். நாங்கள் ஏற்கனவே, அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தற்போது அவருக்கு வாழ்நாள் தடை வழங்கப்படும் வாய்ப்பிருக்கிறது. அவர் எங்களுடனான தேசிய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றாலும் பென்டாங்குலர் தொடரில் பங்கேற்கும் வீரர் என்ற முறையில் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியம் என்றார்.