*பொண்டிங் எச்சரிக்கை
இந்தியன் பிரிமியர் லீக்கில் ஆடுவதற்கு இடையூறு ஏற்பட்டால் அனுபவ வீரர்களை சர்வதேச கிரிக்கெட் சபை இழக்க நேரிடுமென அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்கு (பி.சி.சி.ஐ) சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) தொடக்கப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பி.சி.சி.ஐ. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) அமைப்பை ஆரம்பித்தது. இதில் பங்கேற்க பொண்டிங் உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
ஆனால், ஐ.பி.எல். அமைப்பின் அனுசரணையாளர்கள் தங்களது அனுசரணையாளர்களின் போட்டியாளர்கள் என்பதால் அவுஸ்திரேலிய வீரர்களை இதில் பங்கேற்க அனுமதிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துகொள்ள தடையாக இருந்தால் அனுபவ வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் வாய்ப்பு அதிகமாயிருப்பதாக அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில்;
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் தறுவாயில் இருக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல். அமைப்பு ஒரு வரப்பிரசாதம் தான். இது வீரர்களை கவர்ந்திழுக்கும் என்பது உண்மை. தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அதிக வருமானம் தரும் ஐ.பி.எல். பக்கம் வீரர்கள் சாயும் வாய்ப்பு அதிகமுள்ளது.
சர்வதேச போட்டிகளில் அதிக அலைச்சல் இருக்கிறது. தொடர்ந்து பல மாதங்கள் ஓய்வில்லாமல் விளையாட வேண்டியுள்ளது. ஆனால், ஐ.பி.எல். அமைப்பில் 44 நாட்களில் அதைவிட அதிக பணம் சம்பாதிக்க முடியும். சர்வதேச போட்டிகளில் ஆட பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஐ.பி.எல். அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையும் மற்ற சபைகளும் கலந்து தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் 33-34 வயதுடைய வீரர்களை சர்வதேச கிரிக்கெட் இழக்க நேரிடுமென்று பொண்டிங் தெரிவித்தார்.
அட்டவணைக்கு ஆஸி. ஆதரவு:
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தனது பிடிவாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கு ஏற்றவகையில் ஐ.சி.சி. யின் அட்டவணையை மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் சபை சம்மதித்துள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் யங், அளித்த பேட்டியில்;
அவுஸ்திரேலிய சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லாந்து, ஐ.பி.எல். அமைப்புடன் சர்வதேச அட்டவணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறார். இதன்மூலம் 10 அணி வீரர்களும் ஐ.பி.எல். நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
கோலாலம்பூரில் அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. கூட்டத்தின்போது இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படும். அவுஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். அமைப்போடு ஒப்பந்தம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்குமென்றார்.