* அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் சர்வகட்சி மகாநாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாக 2008 பெப்ரவரி 6 பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை
(நேற்றைய தொடர்ச்சி)
"சமஷ்டி எண்ணக்கருவின் அடிப்படையிலான ஒரு தீர்வுக்காக நாம் போராடி வந்தோம் என்பது இரகசியமானதல்ல. சமஷ்டி எண்ணக்கரு அத்துடன் சமஷ்டி என்ற வார்த்தை யாருக்கேனும் ஜீரணிக்கத்தக்கதாக இல்லாவிடில் அதற்கு மாற்று வழியாக இந்திய முறைமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தோம். இந்த விடயத்திலும் வடக்கு- கிழக்கு இணைப்பு விடயத்திலும் நாம் எமது கருத்துகளை
மாற்றிக் கொள்ளவில்லை. அதாவது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர வேண்டும் என்ற கருத்தை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை".
அதுவே ஆனந்தசங்கரியின் நிலைப்பாடாகும். அவர் மேலும் கூறுகிறார்.
"வன்முறையை நிராகரிக்கும் அதேவேளை, ஒற்றையாட்சி முறைமையின் கீழ் எந்தவொரு நிரந்தரமான தீர்வையும் காண முடியாது என்பதை எமது நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறி இணங்கவைக்க நாம் தொடர்ந்து வன்முறையற்ற வழியிலும் நட்பு வழியிலும் முயலுவோம் என்று அனைவருக்கும் உறுதி கூறுகிறோம்".
அதுதான் ஆனந்தசங்கரி கூறுவது. டக்ளஸ் தேவானந்தா என்ன கூறுகிறார்? 2007 டிசம்பர் 02 ஆம் திகதி `த சண்டே ரைம்ஸ் ' பத்திரிகைக்கு அவர் வழங்கிய ஒரு செவ்வியிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்.
கே: வடக்கு , கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
ப: இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும். வடக்கு- கிழக்கு ஒரே அலகாகச் செயற்படும் ஒன்றுபட்ட ஓர் இலங்கையை நாம் ஆதரிக்கின்றோம். அதுவே எமது கட்சியின் கருத்தாகும்.
எனவே, ஜனாதிபதி எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்? சர்வகட்சி மாநாடு மற்றும் வல்லுநர் குழாம் ஆகியவற்றின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் அவர் கூறியவற்றிலிருந்து பின்வாங்கிச் சென்றது மட்டுமல்ல, அவரது தமிழ் ஆதரவாளர்களான ஆனந்தசங்கரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பரிந்துரைத்தவற்றிலிருந்தும் பின் வாங்கிச் சென்று அவர்களது கருத்துகளுக்கும் கூட இடமளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
நான் இதனையும் கூற வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமெனக்கூறும் அதேவேளை, பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களும் பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்படமாட்டாது என்ற தெளிவானதொரு கூற்றும் விடுக்கப்பட்டுள்ளது. சில துறைகளில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதே இப்பூசலுக்கான காரணமாக அமைந்துள்ளது. அத்துறைகளுள் காணியும் பாதுகாப்பும் முக்கியமானவையாகும். சர்வகட்சி மாநாட்டைத் தான் ஏற்படுத்தி அச்சர்வகட்சி மாநாடு உலகின் ஏனைய பகுதிகளில் நிலவும் வேறு முறைமைகளை ஆராய வேண்டுமெனக் கூறிய ஒரு ஜனாதிபதி அதிகூடிய தன்னாதிக்கம் பற்றியெல்லாம் பேசிய ஒரு ஜனாதிபதி இந்த அதிகாரங்களைக்கூடத் தரமாட்டார்.
அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தம் பற்றி நான் ஒருசில வார்த்தைகள் கூறவேண்டும். அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தம் வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சிந்திக்கின்றது என்பதை நான் தெளிவுபடுத்தவேண்டும். 18 வருடமாக ஒரு யதார்த்தமாக இருந்துவரும் வடக்கு-கிழக்கு இணைப்பை. மகிந்த ராஜபக்ஷ ஓர் அமைச்சராகவும் பிரதம அமைச்சராகவும் இருந்த அரசாங்கம் அடங்கலாக அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களால் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை அது அங்கீகரிக்கிறது.
பதின்மூன்றாவது திருத்தம் அமுல்படுத்துவதாயின். இணைந்த ஒரு வடக்கு-கிழக்கில் அதனை அமுல்படுத்தலாமேயொழிய தனியானதொரு வட மாகாணத்திலோ அல்லது தனியான ஒரு கிழக்கு மாகாணத்திலோ அல்ல. எனது கருத்தின்படி அது முழுதும் சட்டவிரோதமானதாகும்; அதர்மமான செயலாகும். அத்துடன் அது எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மோசடியுமாகும். அந்த விடயத்தில் எமது நிலைப்பாட்டை நான் மிகவும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பதின்மூன்றாவது திருத்தம் வெறுமனே வானத்திலிருந்து விழுந்துவிடவில்லை என்பதையும் நான் கூறவேண்டும். 1986 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்துக்கும் த.வி.கூ. க்கும் இடையே நடைபெற்ற மிக நீண்ட கலந்துரையாடல்களின் விளைவாகவே அது தோன்றியது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ரொனி டி மெல், ஏ.சீ.எஸ்.ஹமீத், கே.டபிள்யு.தேவநாயகம், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். த.வி.கூ.யின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன், அவ்வப்போது ஆனந்தசங்கரி மற்றும் நான் ஆகியோர் அங்கம் வகித்தோம். நான் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒழுங்காக அங்கு சமுகமளித்திருந்தேன். 1986 ஜூலை மாதம் 10 முதல் 15 தினங்களும்,ஆகஸ்ட் மாதம் 10 முதல் 15 தினங்களுமாகப் பல தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நாங்கள் பல கலந்துரையாடல்களை நடத்தினோம். இவ்வாறு தான் பதின்மூன்றாவது திருத்தம் உருவாகியது.
அந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி ஜயவர்த்தன ஏதோவொன்றை உருவாக்கினார். ஆனால், அது எங்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. அதை அவர் அமைச்சரவையில் சமர்ப்பித்த அத்தருணமே 1987 செப்ரெம்பர் 29 ஆம் திகதி நாங்கள் சென்று ஜனாதிபதி ஜயவர்த்தனவைச் சந்தித்தோம்.
சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம் , யோகேஸ்வரன் நான் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து அவர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த நகல் வரைவு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்லவென்றும் செயற்படுத்தமுடியாததென்றும் எடுத்துக் கூறினோம். அத்துடன், அப்படியமைந்த அப்பதின் மூன்றாவது திருத்தம் நிறைவேற்றப்படக்கூடாதெனக் கூறினோம்.
நாங்கள் பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு 1987 அக்டோபர் 28 ஆம் திகதி இது தொடர்பாகக் கடிதம் எழுதினோம். இக்கடிதத்தில் த.வி.கூ செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், த.வி.கூ. தலைவர் சிவசிதம்பரம் த.வி.கூ. உப தலைவரும் திருகோணமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனாகிய நான் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தோம். நாங்கள் மூவருமே அதில் கைச்சாத்திட்டிருந்தோம். அது 1987 அக்டோபர் 28 ஆம் திகதி பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் அக்கடிதத்தைச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கிறேன். அது ஹன்சாட் அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டுமெனக் கோருகிறேன்.