காலகண்டன்
* இன, மொழி, மதத் தேசியவாதிகளின் பிரிவினைக் கோரிக்கைக்கு ஒருபுறம் உந்துசக்தி. மறுபுறம் தேசிய இனங்களின் உரிமையை மறுக்கும் அரசாங்கங்களுக்கு அச்சம் தரும் செய்தி
**அமெரிக்க, ரஷ்ய கெடுபிடி யுத்தம் மீண்டும் சிறியளவில் ஆரம்பித்திருப்பதன் அறிகுறி
கடந்த மாதம் 17-02-2008 அன்று சேர்பியாவின் சுயாட்சி மாநிலமான கொசோவா தனது தனி நாட்டுப் பிரகடனத்தை ஒரு தலைப்பட்சமாக வெளியிட்டது. கொசோவாவின் மாநில சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் இத் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் அங்கீகரித்துக் கொண்டன. அதேவேளை ரஷ்யா, சீனா இப்பிரகடனத்தைக் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர் வரும் ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கொசோவா தனிநாட்டுப் பிரகடனம் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தும். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ரத்து அதிகாரம் இருப்பதால் பாதுகாப்புச் சபையில் கொசோவா அங்கீகாரம் பெறுவது கடினமானதாகவே இருக்கும்.
அதேவேளை இந்தியாவும் சில ஐரோப்பிய ஆபிரிக்க நாடுகளும் பல மூன்றாம் உலக சிறிய நாடுகளும் கொசோவாப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. அமெரிக்காவினதும் சில ஐரோப்பிய நாடுகளினதும் அழுத்தம் காரணமாக கொசோவாப் பிரகடனத்தை ஆதரித்தால் அதன் எதிர் விளைவுகள் தத்தம் நாடுகளில் பாதகமாக அமைந்துவிடும் என்ற அச்சம் பல நாடுகளில் நிலவி வருகின்றது. எவ்வாறாயினும் கொசோவா தனிநாட்டுப் பிரகடனம் உலகில் இரண்டு பட்ட அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. ஒரு புறத்தில் இன மொழி மதத்தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சக்திகளுக்கு நம்பிக்கை தரும் புதிய உத்வேகத்தை கொசோவாப் பிரகடனம் வழங்கி நிற்கிறது. மறு புறத்தில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஆட்சி அதிகாரத்தின் இராணுவக் கரங்கள் கொண்டு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ள அரசாங்கங்களுக்கு அதிர்ச்சி தரும் அச்சச் செய்தியாகவும் கொசோவாப் பிரகடனம் கொடுத்துள்ளது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேசம் தனி நாடாகிக் கொண்டது. இந்தியத் தலையீட்டாலும் மேற்கு பாகிஸ்தானின் ஆளும் வர்க்க ஒடுக்கு முறையாலும் பங்களாதேசப் பிரிவினை அன்று சாத்தியமாகிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தேசிய இன ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட தேசிய இனங்கள் மத்தியில் பிரிவினைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் வலுவடைய ஆரம்பித்தன. இந்தியாவின் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் மட்டுமன்றி இலங்கையிலும் பங்களாதேசப் பிரிவினை எதிரொலிகளைத் தோற்றுவித்தன. அவை ஆயுதப் போராட்டங்களாகி வளர்ச்சி காணவும் செய்தன. இலங்கையின் கடந்த மூன்று தசாப்த காலத் தேசிய இனப்பிரச்சினைக்கான தமிழீழப் போராட்டம் மேற் கூறிய பின்னணியில் உருவாகி வளர்ந்ததேயாகும். இப்பொழுது கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனம் மீளவும் பிரிவினை கோரும் போராட்ட இயக்கங்களுக்கு புதிய விசையையும் வீச்சையும் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
தேசிய இன ஒடுக்குமுறை சமன் பிரிவினை எனக் கொள்ளப்படும் சூழலில் கொசோவாவின் தனி நாட்டுப் பிரகடனத்தை வெறும் உற்சாகம் தரும் ஒன்றாக மட்டும் நோக்க முடியாது. கொசோவாப் பிரகடனத்திற்குப் பின்னால் இருந்து வந்த தேசிய சர்வதேச முரண்பாடுகள், வளர்ச்சிகள், பயன்படுத்தல்கள், ஊடுருவல்கள் போன்றவற்றையும் ஆழமாகப் பார்ப்பது அவசியம்.
கொசோவா இன்றைய சேர்பிய நாட்டின் ஒரு மாநிலம். இங்கு சுமார் 21 இலட்சம் மக்கள் தொகையினர் 10 ஆயிரத்து 887 சதுர கி.மீ பரப்பளவில் வாழ்கின்றனர்.
இவர்களில் 88 வீதமானவர்கள் அல்பேனிய இன முஸ்லிம்கள். 8 வீதமானவர்கள் சேர்பியர்கள். மீதமான நான்கு வீதத்தினர் ஏனைய இன மதத்தவர்கள். இம்மாநிலத்தின் ஒரு எல்லை அல்பேனிய நாட்டுடன் உள்ளது. கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனத்தை பழைய யூகோஸ்லாவியாவின் வரலாற்றோடு இணைத்துப் பார்ப்பது அவசியமானதாகும்.
தென் கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆறு நாடுகளின் சமஷ்டிக் குடியரசாகவே யூகோஸ்லாவியா 1945 இல் உருவாக்கம் பெற்றது.
1. பொஸ்னியா
2. கொறோறியா
3. மசிடோனியா
4. மொன்றோகிறோ
5. சேர்பியா
5 அ.கொசோவோ (சுயாட்சி மாநிலம்)
5 ஆ. வொஜ்வோடினியா (சுயாட்சி மாநிலம்)
6. ஸ்லோவினியா
இவை ஆறும் இணைந்த நாடாகவே யூகோஸ்லாவிய சோஷலிச சமஷ்டிக் குடியரசு டிட்டோ தலைமையிலான கம்யூனிஸ்ட் லீக்கினால் 1945 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.
மாறி மாறி வந்த அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை இப் பால்கன் பிராந்திய மக்கள் முன்னெடுத்து வந்தனர்.
1941- 45 கால கட்டத்தில் டிட்டோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள் தமது பாற்றிசான் அரசாங்கத்தை பெல்கிரேட்டைத் தலைநகராகக் கொண்டு நிறுவினர்.
அதன் ஊடாக சோஷலிச சமஷ்டிக் குடியரசைத் தோற்றுவித்தனர்.
இச் சமஷ்டிக் குடியரசில் யூகோஸ்லாவியாவின் ஆறு பிரதேசங்களைச் சேர்ந்த பல இன, மத, மொழி பேசும் மக்கள் இணைந்திருந்தனர். ஆரம்பத்தில் இனமொழி மதங்களுக்கு அப்பாலான சோஷலிச பொருளாதாரக் கட்டுமானங்களையும் வளர்ச்சிகளையும் நோக்கிய பாதையில் யூகோஸ்லாவியா பயணித்தாலும் அதன் தலைவரான டிட்டோ பின் நாட்களில் சோஷலிசப் பாதையில் இருந்து சறுக்க ஆரம்பித்தார்.
தனக்கான தனிப்பாதை எனக் கூறி அமெரிக்காவுடன் இணங்கிப் போகும் போக்கைக் கடைப்பிடித்தார். இதனால் ஸ்டாலின் காலச் சோவியத் யூனியன் தலைமையுடன் டிட்டோ முரண்படவும் செய்தார். அந்த முரண்பாட்டை அமெரிக்கா நன்கு பயன்படுத்திக் கொண்டது.
அப்பொழுது இருந்தே அமெரிக்கா திட்டமிட்ட வழிகளில் யூகோஸ்லாவியாவை சீர்குலைத்து உடைக்கும் முயற்சிகளை ஆரம்பித்திருந்தது. சோவியத் யூனியனின் செல்வாக்கு மண்டலமாகத் தெற்கு ஐரோப்பாவும் பால்கன் பிரதேச நாடுகளும் இருந்து வருவதானது தன் உலகமேலாதிக்க மூல உபாயத்திற்கு ஆபத்து என்பதை அமெரிக்கா முன்னுணர்ந்து செயலாற்றி வந்தது. அதற்காக அமெரிக்கா எடுத்துக் கொண்ட ஆயுதம் யூகோஸ்லாவியாவைத் துண்டு துண்டுகளாக உடைத்துக் கொள்வது என்பதாகும்.
1980 இல் அதிபர் டிட்டோ காலமானார். அதே காலப்பகுதியில் சோவியத் யூனியன் வீழ்ச்சியையும் சிதைவையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இவை அமெரிக்காவின் நோக்கங்களுக்கு மேலும் வலுவூட்டி வந்தன.
1988- 89 காலப்பகுதியில் யூகோஸ்லாவியாவின் பொருளாதாரம் பன்முகப்பட்ட பின்னடைவுகளைக் கண்டது. அதேவேளை இணைந்திருந்த சமஷ்டிக் குடியரசுகள் தனித்தனி நாடுகளாகிக் கொள்ளவும் முன் வந்தன. இதனால் இன மத முரண்பாடுகள் கூர்மையடைந்த நிலையில் பெருந்தேசிய அடக்குமுறைகள் தலைவிரித்தாடத் தொடங்கின. சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அதனோடு இணைந்த கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ ஆட்சிகளின் வீழ்ச்சிகளும் அமெரிக்காவிற்கு அளப்பரிய வரப்பிரசாதங்களை வழங்கியது. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் ஐ.நா. மன்றம் போன்றவற்றை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளும் நன்கு பயன்படுத்திக் கொண்டன. பொஸ்னிய மக்களுக்கு எதிரான சேர்பிய அரசின் இனப்படுகொலைகளை ஊக்குவித்த அமெரிக்கா மறுபுறத்தில் மனித உரிமைகள் பற்றியும் மனிதாபிமான உதவிகள் பற்றியும் பெரும் குரல் வைத்துக் கொண்டது. விரைவிலேயே இப்பிராந்தியத்தில் `மனிதபிமானப் போரில்' அமெரிக்காவும் மேற்குலகமும் இறங்கிக் கொண்டது. ரஷ்யாவின் பலவீனச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா சேர்பியாவிற்குள் நேட்டோப் படைகளை அனுப்பிக் கொண்டது. சேர்பியாவின் ஒரு சுயாட்சி மாகாணமாக இருந்து வந்த கொசோவாவில் சேர்பியப் பெருந்தேசியவாத ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டங்கள் வளர்ச்சி பெற்றன. சேர்பிய இராணுவம் கொடூர வழிகளில் கொசோவா மக்கள் மீது தாக்குதல்கள் தொடுத்து வந்தன. கொலைகள், இடப்பெயர்வுகள், பாலியல் வன்புணர்ச்சிகள், என உச்ச கட்ட இன அழிப்பு அடக்குமுறைகளில் சேர்பிய இராணுவம் ஈடுபட்டது. அல்பேனிய இன முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கவும் தனிநாடாகிக் கொள்ளவும் அல்பேனிய கொசோவா விடுதலை இராணுவம் அமைக்கப்பட்டு போராட்டங்கள் முன்சென்றன. இப்போராட்ட அமைப்பானது முற்றிலும் அமெரிக்க ஐரோப்பியக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது.
யுகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசை உடைத்து தனித்தனியான ஐந்து நாடுகளாக்கிக் கொள்வதில் அமெரிக்கா சகல வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொண்டது. குறிப்பாகச் சேர்பியாவின் பலத்தை இழக்கச் செய்து அந்நாட்டை அமெரிக்காவின் காலடிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பது அமெரிக்காவின் உட் கிடக்கையாகும். ஆனால், சேர்பியா ரஷ்யாவின் நீண்ட கால இயல்பான நட்பு நாடு என்ற நிலையை இழக்கவில்லை. எனவே, சேர்பியாவின் ஒரு மாகாணமான கொசோவாவில் அமெரிக்கா தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அங்கு சேர்பிய இராணுவத் தாக்குதல்களில் இருந்து கொசோவா மக்களைப் பாதுகாக்கவென நேட்டோப் படைகள் நிலை கொள்ள வைக்கப்பட்டன. ஐ.நா.வின் பல்வேறு பிரதிநிதிகள் அங்கு கண்காணிப்பு மேற்பார்வை என்ற பெயரில் இருந்து வந்தனர். இத்தகைய ஒரு சூழலிலேயே கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனம் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தினம் தினம் நேட்டோப் படையணிகள் ஆப்கான் முஸ்லிம் மக்களை வேட்டையாடி கொன்று குவித்து வருகின்றன. அதே நேட்போப் படைகளின் பாதுகாப்பில் தான் அல்பேனிய முஸ்லிம்கள் தமது ரட்சகர்களாகக் கொண்டு தனிநாட்டைப் பிரகடனம் செய்துள்ளனர்.
யுகோஸ்லாவியாவின் சமஷ்டிக் குடியரசை உடைத்து சின்னாபின்னப்படுத்தவும் அதில் சில நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அமெரிக்க ஐரோப்பிய வல்லரசுகள் தொடர்ச்சியாக எடுத்து வந்த ஊடுருவல் நடவடிக்கையின் அண்மைய விளைவே கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனமாகும். இது உலக நாடுகளுக்கு குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறையை இராணுவ ஒடுக்குமுறையாக விருத்தியாக்கி யுத்தமாக நீடித்து வரும் பெரும் தேசிய வாத வெறி கொண்ட ஆளும்வர்க்க சக்திகளுக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளது.
உலக நாடுகள் பெரியனவாகவோ அன்றிச் சிறியனவாகவோ இருக்கலாம். ஆனால், அந்நாடுகளில் வாழ்ந்து வரும் பல்லினத் தேசியங்களை ஏற்று மதித்து அவற்றுக்குரிய உரிமைகளை நியாயமான அரசியல் தீர்வுகளின் ஊடாக வழங்கி சமத்துவம், சகோதரத்துவம், ஐக்கியம், சுபீட்சம் என்பனவற்றை முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து தமது ஆளும்வர்க்க அதிகாரத் தேவைக்காகப் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அடிப்படையில் தேசிய இனங்களையும் அவர்களது உரிமைகளையும் மறுத்து ஒடுக்குமுறைகளை முன்னெடுத்தால் அதன் விளைவு தேசிய இன விடுதலைப் போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமையும். அத்தகைய போராட்டங்களையும் அதற்கு காரணமான இனமத மொழி முரண்பாடுகளையும் அந்நிய வல்லரசு ஆதிக்க சக்திகள் தமக்குரிய பொருளாதார அரசியல் இராணுவ நோக்கங்களுக்கு ஏற்றாற் போல் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்கு கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனமும் அதற்கு முன்பாக இடம்பெறற நிகழ்வுகளும் தகுந்த பாடமாகும்.
இவ்விடயத்தில் நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளின் பெருந்தேசியவாத ஆளும்வர்க்க முதலாளித்துவ ஒடுக்குமுறையாளர்கள் உரியபடிப்பினை பெறல் வேண்டும். சொந்த மக்களை ஒடுக்குவதன் ஊடாக அவர்களை ஐக்கியப்பட்ட தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டி பிரிந்து செல்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற இறுதிநிலைக்குத் தள்ளிவிடும் கைங்கரியங்களைக் கைவிடவேண்டும். ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் போதியளவு சுயாட்சியுடன் கூடிய அதிகாரப் பகிர்வுக்கு முன்வரல்வேண்டும். அதேநேரம், பிரிவினைக் காண போராட்டம் என்பதை அந்நிய வல்லரசு சக்திகள் தமது பொருளாதார அரசியல் இராணுவத் தேவைகளுக்கான ஒரு களமாக மட்டும் பயன்படுத்துவார்களே தவிர இன ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களது விடுதலைக்கும் விமோசனத்திற்கும் அல்ல என்பது உலக வரலாற்றுப் பிரிவினைகள் மூலமான பட்டறிவுகள் ஊடாகப் படித்துக் கொள்ளல் வேண்டும்.
ஆதலால் கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனத்தின் சாதக பாதக அம்சங்களையும் அதன் வரலாற்று வேர்களையும் தூரநோக்கின் ஊடாக ஆராய்ந்து கொள்வது இன்றைய நிலையில் அவசியமாகின்றது. அதேவேளை, தனது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ள ரஷ்யா மீண்டும் அமெரிக்காவுடனான ஒருவகைப் பனிப்போரில் ஈடுபட ஆரம்பித்திருப்பதையும் கொசோவாவின் தனிநாட்டுப் பிரகடனம் சுட்டிக்காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் உள்முரண்பாடுகள் அந்நிய ஊடுருவல்களுக்கு உரிய தளங்களையும் களங்களையும்தான் உருவாக்கி வருகின்றன என்பதை இருதரப்புச் சக்திகளும் உணர்வார்களா? என்பதே முக்கிய கேள்வியாகும்.