* அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் சர்வகட்சி மகாநாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாக 2008 பெப்ரவரி 6 பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை
(நேற்றைய தொடர்ச்சி)
அந்தக் கடிதத்தில் நாங்கள் கூறியது இதுதான்
இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளில் எமது ஏமாற்றத்தைத் தெரிவிப்பது எங்கள் கடமை என உணர்கின்றோம். இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யாதுள்ளதுடன், தமிழ் மக்கள் அனுபவித்த உயிரிழப்புகள், துன்பங்கள் மற்றும் அழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடாகாது. 1983 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசாங்கத்தின் நற்சேவைகளைப் பயன்படுத்தியும் த.வி.கூ. தமிழ் மக்களுக்கு விதந்துரைக்கக்கூடிய பூரணமான அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை வகுக்கும் நம்பிக்கையுடன் இந்திய அரசாங்கத்தின் ஊடாகவும் த.வி.கூ. இலங்கை அரசாங்கத்துடன் எப்பொழுதும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
இந்தச் சட்டமூலங்களின் உள்ளடக்கங்களை திருப்திகரமானவையும் நியாயமானவையும் நிலைக்கக்கூடியவையுமாக த.வி.கூ. தமிழ் மக்களுக்கு விதந்துரைக்க முடியாமையையிட்டு வருந்துகின்றது.
உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்காக நீங்கள் இலங்கைக்குச் செல்வதற்கு முதல்நாள், வேறு பல விடயங்களுடன், இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்றுடன் இலங்கை நிபுணர்களும் சேர்ந்து அவசியமான சட்டவாக்கத்தை வரைய வேண்டும் எனவும் நாங்கள் தங்களைக் கேட்டுக்கொண்டோம். இது ஒரு நியாயமான வேண்டுகோள் என தாங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இப்போது வரைவில் இந்திய நிபுணர்களின் எவ்வித பங்கேற்பும் இன்றி சட்டவாக்கம் எம்மீது திணிக்கப்படுகின்றது.
சட்டமூலம் வெளியிடப்படுவதற்கு நியாயமான ஒரு காலப்பகுதிக்கு முன்னர் அதன் ஒரு பிரதி இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கச்செய்யப்படும் என த.வி.கூ. முற்றிலும் எதிர்பார்த்தது. இது நடைபெறாது விடக்கூடும் என உணர்ந்து, 1987 செப்டெம்பர் 29 ஆம் திகதி த.வி.கூ.வின் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி ஜயவர்தனவைச் சந்தித்து முறைமையான இந்த வேண்டுகோளை விடுத்தது. சட்டமூலங்கள் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கச்செய்யப்படாமல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதையிட்டு நாம் வருந்துகின்றோம். இது இந்திய அரசாங்கத்தை அவமரியாதைப்படுத்திய செயல்மட்டுமன்றி, பல்வேறு விடயங்களுடன், `எஞ்சிய விடயங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தீர்க்கப்படவேண்டும்' என்று கூறும் ஒப்பந்தத்தின் 2.15 ஆம் பந்தியை அப்பட்டமாக மீறிய செயலுமாகும். இந்தச் சட்டமூலங்கள் நிச்சயமாக ஏதேனும் அத்தகைய தீர்வின் பெறுபேறு அல்ல.
இது நாங்கள் 1987 அக்டோபர் 28 ஆம் திகதி பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளடங்கியிருந்தது. இச்சட்டமூலங்கள் அந்தவகையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அதேவேளை, இந்திய அரசாங்கத்துக்கு நாங்கள் எங்கள் கருத்தை எடுத்தியம்பியதன் விளைவாக, 1987 நவம்பரில் சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக காத்மண்டு சென்றிருந்த ஜனாதிபதி ஜயவர்தன காத்மண்டு மாநாட்டிலிருந்து நாடு திரும்பும் வழியில் டில்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டார். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நான் ஆகிய மூவரும் அப்போது டில்லியில் இருக்குமாறு இந்திய அரசாங்கத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டோம். அங்கு இந்திய அரசாங்கம், அதிகாரிகள், ஜனாதிபதி ஜயவர்தன, அவரது அணியினர் ஆகியோருக்கிடையேயும், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதம மந்திரிக்கும் இடையேயும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 13 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஜயவர்தன அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தில் மேலும் முன்னேற்றங்களைச் செய்ய இணங்கினார். அந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோது நான் டில்லியில் இருந்தேன். நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட வண்ணமிருந்தோம். என்ன நடந்ததென்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அந்த 13 திருத்தங்களும் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை. அதுதான் உண்மை. உண்மையில் நாங்கள் புதுடில்லியை விட்டுப் புறப்பட்ட அன்றைய தினம் காலை நானும் எனது சகாக்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரும் மத்திய அரசாங்கத்தின் அப்போதைய வெளிவிவகார துணை அமைச்சராகவிருந்த ஷ்ரீ நட்வார் சிங்கை டில்லியில் சந்தித்தோம். அத்துடன் வெளிவிவகார அமைச்சில் இணைச் செயலாளராகவிருந்த ஷ்ரீ குல்தீப் சஹதேவையும் சந்தித்தோம். "நாங்கள், அதாவது இந்திய அரசாங்கம், பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலும் முன்னேற்றங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதியிடமிருந்து உறுதியான வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம்" என்று எங்களிடம் கூறப்பட்டது. குல்தீப் சஹதேவ் குறுக்கிட்டு, "இவ்வாக்குறுதிகளை நாங்கள் எழுத்தில் பெற்றிருக்கிறோம் எனக் கூறினார். அதுதான் யதார்த்தம். மாகாண சபைகளின்கீழ் தேர்தல்களில் நாங்கள் போட்டியிடவில்லை. பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட முடியாததொன்றெனவும் அது ஒருபோதும் வெற்றிபெறாதெனவும் நாம் கூறியதால், நாங்கள் அத்தேர்தலில் போட்டியிட மறுத்தோம். அதுதான் பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பான நிலைமையாகும். தயவுசெய்து அதை மறந்துவிடுங்கள். தயவுசெய்து குப்பையில் எறிந்துவிடுங்கள். நாங்கள் அதைக் கைகளால் தொடவும்மாட்டோம்.
இந்தச் சபையில் தமிழர் நிலைப்பாட்டை நான் மிகவும் தெளிவாக்க விரும்புகின்றேன். ஒருசில அடிவருடிகளை, சில கைக்கூலிகளை நீங்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது உங்கள் சார்பாக கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட நீங்கள் பழக்கப்படுத்தி வருகிறீர்கள். தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாமென்று நீங்கள் நினைக்கவேண்டாம். 1956 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வரலாற்று ரீதியாக ஒரு தீர்ப்பை வழங்கிவந்துள்ளனர். அதில் அவர்கள், ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டின் அங்குரார்ப்பண உரையில் கூறியதுபோல், எமது வரலாற்றுரீதியான வாழ்விடப் பிரதேசங்களில் உண்மையான தன்னாதிக்கத்தையும் சுயாட்சியையும் ஆதரித்துள்ளனர்.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, அண்மையில் இங்கு வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் பீ.சிதம்பரம், தென்னாசியாவுக்கான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் ஆகியோரும் இணைத் தலைமை நாடுகளும் தமிழர்களும் முஸ்லிம்களும் தாம் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பகுதிகளில் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் தீர்வின் வகை பற்றியும், அரசாங்கக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய தீவிர மாற்றம் பற்றியும் உண்மையான தன்னாதிக்கம் பற்றியும் பேசியுள்ளனர்.
அக்கூற்றுகளை நான் பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். அவை ஹன்சாட் அறிக்கையில் பதியப்பட்டுள்ளன. உங்களுடைய பதின்மூன்றாவது திருத்தம் சர்வதேச சமூகம் சிந்திக்கும் தீர்வுக்குச் சிறிதும் கிட்ட வரவில்லை. எனவே, யாரையும் ஏமாற்ற முயலாதீர்கள். தயவுசெய்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள முயலாதீர்கள். நீங்கள் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருக்கமாட்டீர்கள். அதனை மறந்துவிட்டு நேர்மையாக வாருங்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றைப் பற்றிச் சிந்தியுங்கள்.
நான் எனது உரையை நிறைவுசெய்யுமுன்னர், பெப்ரவரி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை `த நேஷன்' பத்திரிகைக்குத் தான் வழங்கிய ஒரு செவ்வியில் சர்வகட்சி மாநாட்டுத் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அளித்த சில பதில்களை இங்கு வாசிக்க வேண்டுமெனக் கருதுகிறேன். அதில் கூறப்படுவது;
கே : சர்வகட்சி மாநாட்டில் உங்கள் தலைமைத்துவத்தின்கீழ் ஒருபோதும் கலந்துரையாடப்படாத ஒன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உங்களை வற்புறுத்திய பின்னர் உங்களுடைய நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
ப : எமது பிரதான அறிக்கையை நாம் பூர்த்திசெய்யும்வரை 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விடயம் எழாதிருந்திருந்தால் நல்லதென நான் கருதுகிறேன். எனினும் இது ஓர் எதிர்பாராத நிகழ்வு என்பதையும், சர்வகட்சி மாநாட்டையும் வல்லுநர் குழாமையும் ஏற்படுத்திய நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி தான் மிகவும் அவசர தேவையெனக் கருதிய ஒன்றைச் சர்வகட்சி மாநாடு உடனடியாக நிறைவேற்றவேண்டுமெனக் கோரியதையும் கருத்திற்கொண்டு பார்த்தபோது, தலைவராகிய நானும் ஏனைய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அவ்வேண்டுகோளுக்கு இணங்குவதைத் தவிர, செய்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை."
எனவே, சர்வகட்சி மாநாட்டுத் தலைவரது கூற்றுப்படி, அது ஜனாதிபதியினால் திணிக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு வெறுமனே இணங்கினார்கள்.
அவர் மேலும் கூறுகிறார்:
"இச்செயன்முறை முழுவதும் நான் எனது கட்சியான ல.ச.ச.க.யின் ஓர் உறுப்பினரென்ற வகையில் ஒத்த கருத்துடைய ஏனைய ஒருசில அரசியல் கட்சிகளுடன் இணைந்து செய்கின்ற ஒரு செயலாக இருந்திருப்பின், நான் வேறுவிதமாகச் செயல்பட்டிருப்பேன். எனினும், தற்போதைய சூழ்நிலைகளில் இலங்கை மக்களும் எமது நாட்டின் எதிர்காலத்தில் ஆர்வங்கொண்டுள்ள வெளிநாடுகளிலுள்ளவர்களும் சர்வகட்சி மாநாடு தற்போது தேர்ந்தெடுத்துள்ள பாதையைப் பின்பற்ற என்னை இட்டுச்சென்ற சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வார்களென்று எண்ணுகிறேன்"
அவரிடம் கேட்கப்பட்ட இன்னுமொரு கேள்வி உள்ளது. அதற்கு அவர் பதிலளித்தார். அதனை வாசிக்கவேண்டுமென நான் நினைக்கின்றேன். அது கூறுகிறது:
கே : இம்முழுச் செயற்பாட்டையும் தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு நீங்கள் எவ்வாறு விளக்கமளிப்பீர்கள்? நடைமுறையைத் தாமதப்படுத்த அவர் விரும்பினார்.
ப : சர்வகட்சி மாநாடு கடந்த ஒன்றரை வருட காலமாகத் தயாரித்துவந்த இறுதித் தீர்வாலோசனைத் தொகுதியைத் தன்னிடம் ஒப்படைப்பதற்கு ஜனவரி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை ஜனாதிபதி விதித்திருந்தார். ஆனால், தமிழ்பேசும் மக்களை வென்றெடுப்பதற்கு 13 ஆவது திருத்தமே தனக்குப் போதுமானதாகுமென அவர் எமக்குக் குறிப்பறிவித்தார்..."
அதாவது, மட்டக்களப்பிலுள்ள அவரது அடிவருடிகள், வேறு யாருமல்ல.
"..அத்துடன் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வின்மீதான தனது பற்றுறுதி பற்றிச் சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்காக, அதன்மூலம் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராகக்கூடிய பிரதான தீர்வாலோசனைத் தொகுதியை வகுப்பதில் எமக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வதற்காக."
கே : காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாதிருக்குமாறு ஜனாதிபதி உங்களைக் கேட்டுக்கொண்டதாகவும் அறியவருகிறது...?
இதனை அவர் தனது பதிலில் உறுதிப்படுத்துகிறார்.
எனவே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? யாரை ஏமாற்றுகிறீர்கள்? தமிழ் மக்களை ஏமாற்றுவதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். சர்வதேச சமூகம் பிரச்சினைக்குத் தீர்வாக அமையக்கூடிய அரசியல் தீர்வின் அடிப்படையைத் தெளிவாக விளக்கியுள்ளது. நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள். அதுதான் மிகவும் பரிதாபமான விடயமாகும்.
நான் எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர், இந்தியாவில் ஒரு மிகவும் பிரபல்யமான பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் இராஜதந்திரியும், மகாத்மா காந்தியினதும் மெட்ராஸ் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரும் இந்தியாவின் முதலாவது ஆளுநருமான சீ.இராஜகோபாலச்சாரியினதும் பேரனுமாகிய ராஜ்மோகன் காந்தி தெரிவித்த சிறு கருத்துரையை வாசித்துக்காட்ட விரும்புகிறேன். அவர் இரண்டு பெரும் தலைவர்களின் பேரனாவார். அவர் அண்மையில் வழங்கிய செவ்வியொன்றின்போது, அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்தச் செவ்வி பெப்ரவரி 3 ஆம் திகதி `த சண்டே லீடர்' பத்திரிகையில் வெளிவந்தது. அது பின்வருமாறு கூறுகிறது:
கே : தற்போது இந்தியாவில் வழக்கிலிருக்கும் சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு முறையிலிருந்து இலங்கை எவ்வாறான படிப்பினையைக் கற்றுக்கொள்ள முடியுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
அதற்கு அவர் அளித்த பதில் ஒரு நீண்ட பதிலாகும். நான் முழுப் பதிலையும் இங்கு வாசிக்கவில்லை. பொருத்தமான பந்தியை வாசிக்கிறேன். அவர் கூறுகிறார்;
"தன்னாதிக்கம் உண்மையானதாயின் அது செயற்படும். தன்னாதிக்கம் வழங்குதலென்பது வெறுமனே ஒரு வெளிப்பகட்டாயின்..." இதைத்தான் நீங்கள் பதின்மூன்றாவது திருத்தத்தின்மூலம் செய்ய முயலுகின்றீர்கள் - ஒரு வெளிப்பகட்டு, எவ்வித நம்பகத் தன்மைக்கும் ஏற்புடையதல்லாத ஓர் ஏமாற்றுவித்தை.
அவர் தொடர்ந்து கூறுக