பிரஜைகளின் மனித உரிமைகளை `பாதுகாப்பதற்கான பொறுப்பு' (Responsibility to Protect) (R2P) என்பதன் பெயரால் இலங்கையில் சர்வதேசத்தின் தலையீட்டுக்கான போராட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்கி வழி நடத்துகின்றது என்பது இடதுசாரி சிந்தனையுடைய கட்சியென தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஜே.வி.பி.யின் பிந்திய குற்றச்சாட்டு.
`இலங்கையில் தீய சக்திகளின் கூட்டணிக்கு இந்தியா தலைமை தாங்குகின்றது. இந்தக் கூட்டணியில் புதுடில்லி, பிரசல்ஸ், ஒஸ்லோ, வாஷிங்டன், டோக்கியோ ஆகியவை பங்காளிகளாகும். இந்த தீய சக்திகளின் கூட்டணி குறித்து நாம் மிகவும் கவலையடைந்திருக்கிறோம்' என்பது கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளிநாட்டு நிருபர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருந்த கருத்துகளின் ஒரு பகுதியாகும்.
`பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்பது சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவினால் உருவாக்கப்பட்ட கருத்தியல் கோட்பாடாகும். இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பதிவுகளின் அடிப்படையில் சர்வதேசம் இங்கு தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவர் தெரிவித்திருந்த அபிப்பிராயமானது பாரிய சர்ச்சையை தென்னிலங்கையில் தோற்றுவித்திருந்தது.
இப்போது `பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்பதன் பெயரால் சர்வதேசத்தின் தலையீட்டுக்கான போராட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்குவதாக ஜே.வி.பி. தலைவர் சாடியுள்ளதுடன், இந்த நோக்கங்களில் வெற்றிகாண ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார்.
வட,கிழக்கிலும் தலைநகர் கொழும்பிலும் ஆட்கடத்தல், காணாமற் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. மோசமான இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குரிய உள்சார் கட்டமைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்படுவோருக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்ற போதும் இந்த உரிமை மீறல்கள் குறைந்தபாடாக இல்லை.
இதேவேளை, 2006 ஏப்ரலின் பின் மோதல் அதிகரித்ததைத் தொடர்ந்து 1 இலட்சத்து 87 ஆயிரத்து 700 பேர் தற்போதும் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் கூறுகின்றது. அதேசமயம், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் மோதல்களால் ஏற்கனவே இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தோர் தொகை 3 இலட்சத்து 12 ஆயிரமென ஐ.நா. அறிக்கை கூறுவதுடன், இவர்களுக்கு உதவ 19 மில்லியன் டொலர்களை வழங்குமாறும் கோரியுள்ளது. இந்த இலட்சக்கணக்கான மக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக சொல்லொணா துன்பத்தில் அவதியுறுகின்றனர். இவர்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்குரிய அடிப்படை வசதிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அச்சமற்ற சூழ்நிலையில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான நிலைவரம் மிகவும் அவசியமாகும். இந்நிலையிலேயே இலங்கையின் இன நெருக்கடியின் தாற்பரியத்தை நன்கு அறிந்தும் உணர்ந்துமிருக்கும் இந்தியா, பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், இலங்கையிலுள்ள சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வைக் காணவேண்டுமென்று இந்தியா கூறி வருகிறதே தவிர, நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் சிறப்புச் சலுகைகளை செய்யுமாறு வலியுறுத்தவில்லை. ஏனைய மக்களுக்குள்ள உரிமைகள், சலுகைகள் தமிழ் மக்களுக்கும் வேண்டுமென்பதே இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளினதும் கோரிக்கையாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுப்பதாகவும் இந்த 13 ஆவது திருத்தம் இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்ட சட்டவிரோதமானதென்றும் ஜே.வி.பி. வாதிடுகிறது.
கருத்துச் சுதந்திரம் யாவருக்கும் உள்ளது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், மக்களின் அதாவது குறித்த ஒரு சமூகத்தினரின் மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படும் போது அவை தொடர்பான நியாயங்களை எடுத்துரைக்கவோ அல்லது திருத்திக் கொள்ளுமாறு அறிவுரைகள், வழிகாட்டுதல்களை வழங்குவோரை காரசாரமாக கண்டிப்போர் தொடர்பாக எதனைக் கூறமுடியும்? ஒரு சிறிய அறிவுரையை அவர்கள் ஏற்கக் கூடியதாக இருந்தால் தெரிவிக்கலாம். கிறிஸ்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தளம் ஒன்று உள்ளது. முட்டாள்களின் குழு (Ship Of Fools.com) என்ற அந்தத் தளத்தில் நரகம் என்ற பிரிவு உள்ளது. முடிவில்லாமல் வாதங்களை முன்வைக்க விரும்புவோர் அந்தத் தளத்தில் இணைந்து கொள்ள முடியும். நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டு விதண்டாவாதங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு இந்தத் தளமானது சில சமயம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும்.