நேபாளத்தின் மாதேசி இனக் கட்சிகளுடன் அந்நாட்டரசு நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களை சமாதானப் பேச்சுக்கு மீண்டும் அழைக்கும் இறுதிக் கட்ட முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. மாதேசிகள் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக மாதேசி முன்னணி என்ற மாதேசிக் கட்சிகளின் கூட்டணியின் தலைவர்கள், பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை அவரது இல்லத்தில் சந்தித்து செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்தினார்கள். ஆனால், இந்தப் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பேச்சு தோல்வியடைந்ததால் மாதேசிகளைச் சமாதானப்படுத்தி அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அரசில் அங்கம் வகிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் ஜலநாத் தெரிவித்தார். அரசுடன் நடந்த பேச்சின் போது தங்கள் இனத்தவர் வசிக்கும் தெராய் பகுதிக்கு சுயாட்சி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஆதரித்ததாக தெராய் மாதேசி ஜனநாயகக் கட்சியின் தலைவர் ராமச்சந்திர ராய் தெரிவித்தார்.
எனினும், அரசு தரப்பினர் முழுவதமாகத் தயார் நிலையில் இல்லாததால் பேச்சில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்றார் அவர்.
பிரதமர் கொய்ராலா, மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா உள்ளிட்ட ஆளும் ஏழு கட்சிக் கூட்டணியின் தலைவர்கள் புதன்கிழமை சந்தித்து மாதேசிகளின் பிரச்சினை குறித்துப் பேசினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மாதேசி இனத்தலைவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் எனத் தெரிகிறது. அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடந்த திங்கட்கிழமை கடைசி நாளாகும்.
ஆனால், மாதேசிக் கட்சிகளைச் சேர்ந்த யாரும் கடைசி நாள் வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. தற்போதைய அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் பங்கேற்கலாம் என்ற முடிவுக்கு மாதேசிக் கட்சிகள் வந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சின் போது, அரசியல் நிர்ணய சபைத் தேர்தலைத் தள்ளி வைக்கும்படியும் இல்லையென்றால் தங்களது வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் எனவும் மாதேசித் தலைவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தேர்தலை மீண்டும் தள்ளி வைப்பதற்கு ஒப்புக் கொள்ளாத அரசு, வாக்குப்பதிவு நாளை மாற்றாமல் அதற்கு முந்தைய நடைமுறைகளுக்கான கால அட்டவணையை வேண்டுமானால் மாற்றலாம் எனக் கூறியது. இதன் மூலம் மாதேசி சமூகத்தினர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவை ஒட்டிய தெராய் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான சந்தைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டு அங்குள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.