* பராக் ஒபாமா
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிர வாதிகளை விரட்டுவோமென அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் செனட்டர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜோன் மைக்கெய்ன் தெரிவு செய்யப்படுவது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இருவரும் ஆதரவுக்கூட்டங்களை நடத்தியும் விவாதங்களில் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் ஒஹியோ மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஹிலாரிக்கும் ஒபாமாவுக்கும் விவாதம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளுடான கொள்கை என்ன என்று ஒபாமாவிடம் கேட்டார் ஹிலாரி.
இதற்கு பதிலளித்த ஒபாமா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை விரட்டுவோம் எனத்தெரிவித்தார். நீங்கள் எப்போதும் பாகிஸ்தானில் குண்டு போடுவேன் என அச்சுறுத்தியே வருகிறீர்கள். இது நல்ல நிலைப்பாடு அல்ல என்றார் ஹிலாரி.
நான் எப்போதும் பாகிஸ்தானில் குண்டு வீசுவேன் என கூறியதில்லை. அங்குள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு பிடித்தாலோ அல்லது பிடிக்காமல் விட்டாலோ, நாம் அவர்களை கண்டிப்பாக பிடிக்க வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன்.
முஷாரப்பும் தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தீவிரவாகளை ஒழிக்க அவர் நல்ல ஒத்துழைப்பு தருவார் என நம்புகிறேன்.
பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் தீவிரவாதிகளை ஒழிக்க இதுதான் சரியான நடவடிக்கை.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றால் அது எந்த நாடாக இருந்தாலும் அங்கு சென்று தாக்குதல் நடத்துவோம். ஈராக்கில் அல் - ஹைடா முகாம் அமைத்தாலும் அங்கு சென்று தாக்குவோம். இதில் பாகிஸ்தான், ஈராக் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஒரு ஜனாதிபதியாக மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். என்னுடைய முடிவு எப்போதும் அமெரிக்கர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்றார் ஒபாமா.
மேலும் உலக மயமாக்கலில் இருந்து நாம் ஒதுங்கி இருக்க முடியாது. அதேசமயத்தில், நமது நாட்டின் வேலைவாய்ப்புக்களை வெளிநாடுகளுக்கு ஒப்படைப்பதை ஆதரிக்கவும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.