இலங்கை கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்களமீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி 25 தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் கடந்த 27 ஆம் திகதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கரை திரும்பாததால் கலவரமடைந்த உறவினர்கள் தேடுதலில் இறங்கிய போது 25 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தமை தெரியவந்தது.
இதனால், நேற்று மீன் பிடிக்கிராமங்களில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. உறவினர்கள் இது குறித்து மீன் துறை அமைச்சிடமும் கடலோர காவல் படையினரிடமும் முறைப்பாடு செய்தனர். தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியாளர் சோதி நிர்மலா தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் அவர்களின் விசைப்படகுகளும் நீர்கொழும்பு என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாகர் கோவில் மீன்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதேநேரம் இந்திய கடல்எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 சிங்கள மீனவர்களை இந்திய கடலோர கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் மற்றும் நாகை கடல் பகுதியில் 4 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களில் சந்தேகமடைந்த கடலோரக் காவல் படையினர் அவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.
படகுகளுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே வரும்படி அழைத்த போது தாம் சிங்கள மீனவர்கள் எனவும் தங்களை எதுவும் செய்ய வேண்டாமெனவும் கூறியபடி மீனவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் தொடர்பாகவும் இலங்கை தூதரகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவற்படை அதிகாரி ஷ்ரீகாந்த் தெரிவித்தார்.