* ஐ.தே.க. எச்சரிக்கை
எம்.ஏ.எம்.நிலாம்
அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கமைய ஜனாதிபதி உடனடியாக அரசியலமைப்புப் பேரவையை அமைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தவறினால் அனைத்து எதிர்க் கட்சிகளுடனும் இணைந்து நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாமென எச்சரித்துள்ளது.
அரசியலமைப்பின் 42 ஆவது ஷரத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் யாப்பை மதிக்காமல் தன்னிச்சையாக செயற்பட முனைவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தமென்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை புறந்தள்ளிச் செயற்பட எவராலும் முடியாது. நாட்டின் ஜனாதிபதியும் பிரதமர் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கும் போது செய்யும் பதவிப் பிரமாணத்தின்போது நாட்டின் அரசியலமைப்புக் கிணங்கவும் அதனைப் பாதுகாப்பதற்கும் உறுதி மொழியளித்தே பதவியேற்றுள்ளனர். ஆனால், 17 ஆவது அரசியலமைப்பின் படி அரசியலமைப்புப் பேரவையை அமைக்கும் விடயத்தில் யாப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் காலால் உதைத்தெறிந்துள்ளனர். அரசியலமைப்புக்கு விரோதமாகவே அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்பட்டு வருகின்றனர்.
அரசியலமைப்புப் பேரவைக்கான பெயர்ப் பட்டியலை பாராளுமன்றம் சமர்ப்பித்து நீண்ட காலமாகிவிட்டன. இதன்படி ஜனாதிபதி தமது பிரதிநிதியை நியமித்து அரசியலமைப்புப் பேரவையை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும். அரசியலமைப்பின் 42 ஆவது ஷரத்துக்கமைய ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தமது பொறுப்பை நிறைவேற்றாமல் 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவுக்குழுவின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை அரசியலமைப்புப் பேரவையை அமைக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தேர்தல் முறை மாற்றத்துக்காக ஆராய்வதற்கு தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளோ சிபாரிசுகளோ இன்னமும் வெளியிடப்படவில்லை. அதற்காக தேர்தல்கள் நடத்தாமல் கைவிடப்பட்டுள்ளனவா? எனக் கேட்கின்றேன். 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படும் குறைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு கடந்த ஆறு மாத காலமாக கூட்டப்படவே இல்லை.
ஜனாதிபதியும் அரசாங்கமும் சுயாதீன ஆணைக்குழுக்களை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டே அரசியலமைப்புப் பேரவையை நியமிப்பதை தவிர்த்து வருகின்றது. ஆளும்தரப்பினர் தமது சுயநல அரசியல் செயற்பாடுகளுக்காக இந்தத் தவறான முடிவை எடுத்திருப்பதாகவே மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம். இது இறுதிச் சந்தர்ப்பமாகக் கூட அமையலாம். இப்போது அரசியலமைப்புப் பேரவை அமைக்கும் விடயத்தில் எதிர்க் கட்சிகள் கூட்டாக செயற்பட்டு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பையும் பாராளுமன்ற இறைமையையும் பாதுகாப்பதற்காக அனைத்துச் சக்திகளையும் இணைத்துச் செயற்படத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் புத்திஜீவிகள், மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாகவும் ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.