மின் கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அது பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மின்சார சபையின் பொதுமுகாமையாளர் பி.ஆர்.பிள்ளேபெரும, அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னரே மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமெனக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னரே மின் கட்டணங்களை அதிகரிக்க முடியுமென்ற காரணத்தால் முன்னர் குறிப்பிட்டது போன்று இன்று முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை நாம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.
மின் கட்டணங்கள் அதிகரிப்பது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்குமாறு மக்களிடம் கடந்த மாதம் 30 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தோம்.
இதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
நாம் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கருத்துகள், யோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்பவற்றை இரண்டு குழுக்கள் மூலம் ஆராய்ந்து வருகின்றோம்.
இந்த ஆய்வு அறிக்கை பூர்த்தியடைந்ததன் பின்னர் இறுதி யோசனைக்காக மின் சக்தி அமைச்சர் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம். அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமையவே நாம் மின் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த முடிவினை எடுக்க முடியும் என்றார்.