* 3 பொலிஸார் உட்பட 7 பேர் காயம்; அதிகாலை சோதனைக்கு படையினர் சென்றவேளை சம்பவம்
கொழும்பு முகத்துவாரம் அளுத்மாவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று பொலிஸார் உட்பட ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்.
இக்பாவத்தை சந்தியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அளுத்மாவத்தை வீதியில் 4 ஆவது ஒழுங்கையிலுள்ள (தோட்டம்) வீடொன்றின் மூன்றாவது மாடியிலேயே நேற்றுக் காலை 6.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரிய சத்தத்துடன் குண்டுவெடித்ததால் கொழும்பு நகரின் பல பகுதிகள் அதிர்ந்துள்ளன.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது;
மட்டக்குளிப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அளுத்மாவத்தை 4 ஆம் ஒழுங்கையிலுள்ள வீடுகளில் பொலிஸார் தேடுதலையும் சோதனையையும் நடத்தியுள்ளனர்.
வீடு வீடாக நடைபெற்ற இந்தத் தேடுதலின்போது, அந்த ஒழுங்கையிலுள்ள மூன்று மாடி வீட்டிலும் தேடுதலும் சோதனையும் நடத்திய பொலிஸார் காலை 6.10 மணியளவில் மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த வீட்டின் கதவைத் தட்டிய பொலிஸார் கதவைத் திறக்குமாறு கூறியபோதும் கதவு திறக்கப்படாத நிலையில் பெரும் சத்தத்துடன் அந்த அறைக்குள்ளிருந்து குண்டு வெடித்துள்ளது.
கொழும்பின் பல பகுதிகளையும் அதிரவைத்த இந்தக் குண்டுவெடிப்பால் அந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடி இடிந்து விழுந்ததுடன் மூன்றாவது மாடியின் தரைப்பகுதியும் உடைந்து விழுந்துள்ளது.
குண்டு வெடிப்பாலும் மேல்மாடி இடிந்து கீழே வீழ்ந்ததாலும் அவற்றுக்குள் சிக்கி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பொலிஸார் படுகாயமடைந்ததுடன் அந்த வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்த நால்வரும் படுகாயமடைந்தனர்.
இந்த வீட்டின் அருகிலிருந்த வீடுகள் சிலவும் சேதமடைந்ததுடன் அங்கிருந்தவர்களில் சிலரும் சிறு சிறு காயங்களுக்குள்ளானார்கள்.
இந்தப் பாரிய குண்டு வெடிப்பால் மூன்றாவது மாடியின் கூரை சிதறிப் பறந்ததுடன் மூன்றாவது மாடி வீட்டினுள் நின்று குண்டை வெடிக்க வைத்ததாகக் கூறப்படுபவரின் உடல் பாகங்கள் சிதறி ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடுகளின் மேல் சென்று வீழ்ந்துள்ளன.
பின்னர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தேடுதல் நடத்திய பொலிஸாரும் இராணவத்தினரும் குண்டு வெடித்த வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் தலையொன்றையும் மற்றொரு வீட்டின் மேல் கூரையிலிருந்து கால் ஒன்றையும் மற்றொரு வீட்டின் மேல் கூரையிலிருந்து சிதைந்துபோன நிலையில் சில உடற்பகுதிகளையும் கண்டுபிடித்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வாகனங்கள் மூலம் தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் அவசர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
இதேநேரம், அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த படையினரும் பொலிஸாரும் அப்பகுதியிலிருந்து எவருமே வெளியேறாதவாறு தடுத்து நிறுத்தியதுடன் அளுத்மாவத்தை வீதியில் இக்பாவத்தை சந்தி முதல் சென்.ஜேம்ஸ் சந்திவரையான வீதியை மூடி சகல போக்குவரத்துகளையும் தடை செய்தனர்.
மோட்டார் சைக்கிள் படையணியும் இராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரும் அவ்விடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்தனர்.
குண்டு வெடித்த வீட்டின் கீழ் மாடிகளிலிருந்தவர்களையும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான சிலரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை மேலதிக விசாரணைக்காக முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
முதலில் இந்தக் குண்டுவெடிப்பில் ஏழுபேர் மட்டுமே படுகாயமடைந்ததாகத் தகவல்கள் வெளியானபோதும், தேடுதல்களை நடத்திய படையினர் சிதைந்து போன தலையையும் உடற்பகுதியையும் கண்டு பிடித்ததையடுத்தே இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலெனத் தெரியவந்தது.
இதையடுத்து அப் பகுதியில் தேடுதலும் சோதனையும் முடுக்கிவிடப்பட்டதுடன் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகளும் நடத்தப்பட்டன. இவ்வேளையில் குண்டு வெடித்த பகுதியிலிருந்து ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியொன்றும் சில ரவைகளும் ரவைக் கூடொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முற்பகல் வரை இந்த சோதனைகளும் தேடுதலும் நடைபெற்ற நிலையில் அதன் பின் அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது. அப் பகுதியில் முற்பகலுக்குப் பின்னரே கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொலிஸாரே படுகாயமடைந்தனர். இதில், பெண் கான்ஸ்டபிளின் நிலைமை ஆபத்தாயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் வவுனியாவைச் சேர்ந்த இளைஞரெனவும் இவர் மின்சாரவேலைகள் செய்பவரெனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.