மட்டக்களப்பில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்திருக்கும் நிலையில் தேர்தலைக் குழப்பும் நோக்கத்தில் மட்டக்களப்பு நகரிலும் ஏனைய முக்கிய பிரதேசங்களிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்காக பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகத் தற்கொலைத் தாக்குதல்களுக்குத் தேவையான வெடிகுண்டுப் பொருட்கள், ஆயுதங்கள், தற்கொலைக் குண்டுகள், தற்கொலைக் கவச உடைகள் ஆகியவற்றைப் பெருந்தொகையில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்புப் புலனாய்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலிகள் இயக்கத்தினர் மேற்படி தற்கொலைத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொலை உடைகள், உபகரணங்களை மட்டக்களப்பு புறநகர் பிரதேசங்கள் மற்றும் மாகாண எல்லைப் பகுதிகளுக்குள் கடத்திவந்து இரகசியமான இடங்களில் மறைத்துவைத்துள்ளார்கள் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் மட்டக்களப்பு மாகாணத்துக்குள் கடத்தப்பட்டு கந்தளாய், சேருநுவர பிரதேசத்தில் கல்லடி பகுதியிலுள்ள ஒரு இரகசிய நிலையத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான வெடிகுண்டுப் பொருட்களையும் ஆயுதங்களையும் தற்கொலைக் குண்டுகளையும் தற்கொலைக் கவச உடைகளையும் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மேற்படி பொருட்கள் அனைத்தும் கல்லடிப் பகுதியில் பாரிய பாறை ஒன்றின் கீழுள்ள மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர் இந்த வெடிகுண்டு இரசாயனங்கள், ஆயுதாரிகள் , தற்கொலை உடைகள் அனைத்தும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் குறித்த இடத்துக்குப் பயங்கரவாதிகளால் எடுத்து வரப்பட்டவையாகத் தெரிவதாகவும் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தும் அவ்வாறே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்ப தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டு பொருத்தும் கவச உடைகள் அடங்கிய இரண்டு பொதிகள் , தற்கொலைக் குண்டுகள் தயாரிப்பதற்கான அதி சக்தி வாய்ந்த பெருந்தொகை வெடிகுண்டு மருந்துகள், 5000 ஜி.பி.எம் .ஜி.துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரண்டு பெட்டிகள் மற்றும் ஆர்.பி.ஜி துப்பாக்கிகள் , 9 மி.மீற்றர் கைத்துப்பாக்கிகள், ரி.56 துப்பாக்கிகளுக்கான 6200 ரவைகள், குண்டுகள் ஆகியவற்றுடன் 7 கிலோ நிறையான கிளைமோர், அதிசக்தி வாய்ந்த சி.4 வெடி குண்டுப் பொருட்களும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாகாண சபைத் தேர்தலை நடக்கவிடாமல் குழப்புவதற்காக தாக்குதல் மற்றும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் இயக்கம் இட்டிருக்கும் திட்டத்தின்படி தேர்தல் வேட்பாளர்களைப் படுகொலை செய்தல் மற்றும் முக்கிய தேர்தல் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை நடத்துதல் போன்ற அழிவு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளைப் பயங்கரவாதிகள் செய்து வருவதாக ஏற்கனவே அரச புலனாய்வுப் பிரிவினரின் கருத்துத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அத்துடன் குறித்த அழிவு நோக்கங்களுக்கு வேண்டிய மேற்படியான அனைத்துப் பொருட்களும் மட்டக்களப்பு மாகாணத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன எனவும் அவ்வாறே தற்கொலைக் குண்டுத் தாக்குதல், குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காக தற்கொலைப் படையினர் உட்பட புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் மாகாணத்துக்குள் ஊடுருவியிருப்பதாகவும் மேலும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்தே பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் கந்தளாய் பிரதேசத்துக்கு விரைந்து சேருநுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 24 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கல்லடிப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்து மேற்படி தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் தொடர்ச்சியான தீவிர சோதனைகளின் பின்னரே தற்கொலைத் தாக்குதல்களுக்கான குறித்த பெருந்தொகையான பொருட்களையும் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் அரச புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேற்படி பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் தேடுதல் சோதனை மற்றும் விசாரணைகளை புலனாய்வு விசேட பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். திவயின: 25/02/2008