* நடிகர் ஷாருக்கான்
வர்த்தக ரீதியாக பணமழை பொழியும் தன்மையுடையது கிரிக்கெட் என நடிகர் ஷாருகான் மனம் திறந்து கூறியுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கொல்கத்தா அணியை வாங்கியுள்ள பிரபல பொலிவூட் நட்சத்திரம் ஷாருக்கான் . இவர் கிரிக்கெட்டுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கு ஏன் வழங்கக்கூடாதென இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ) தலைவர் சுரேஷ் கல்மாடி கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் கொமன்வெல்த் போட்டிகளுக்கான விளம்பரத் தூதராக ஷாருக்கானை நியமிக்கும் உத்தேசமிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஷாருக்கான் அளித்த பேட்டியில்;
இன்றைய உலகத்தில் வர்த்தகமும் தொழிலும் மிகவும் முக்கியமானவை. வர்த்தக ரீதியாக நிலைத்து நிற்கும் தன்மை கிரிக்கெட்டுக்கு இருக்கிறது. இதிலிருந்து பணம் சம்பாதிக்க நாங்கள் விரும்புகிறோம். ஒரே ஒரு விளையாட்டை மட்டும் நான் ஆதரிப்பதாகத் தவறாக நினைக்க வேண்டாம். நான் ஹொக்கி, கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன்.
கிரிக்கெட்டில் கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டு பிற விளையாட்டுகளில் கவனம் செலுத்துவேன். பிரிமியர் லீக்கில் ஈட்டும் பணத்தை ஹொக்கி , கால்பந்து , கபடி போன்ற மற்ற ஆட்டங்களில் செலவிடுவதுதான் என்னைப் போன்றவர்களின் அடுத்த கட்டமாக இருக்கும் . நமது கால்பந்து அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதைப் பார்க்க விரும்புகிறேன் . எந்த விளையாட்டையும் குறைத்து மதிப்பிட முடியாதென்றும் ஷாருக்கான் கூறினார்.