அவுஸ்திரேலிய தொடரில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கப்டன் தோனி மற்றும் கில்கிறிஸ்ரின் `கிளவுஸ்' தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.
முக்கோணத் தொடரின் 10 ஆவது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக `டைவ்' அடித்து `கட்ச்' பிடித்தார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, தோனியின் `கிளவுஸ்' பெரிதாக உள்ளதாக புகார் கூறினார்.
பொதுவாக விக்கெட் கீப்பரின் `கிளவுஸில்' கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் `கிளவுஸில்' இடைவெளி இல்லாமல் தையல் போடப்பட்டிருந்தது. இது ஐ.சி.சி., விதிமுறை 40.2 இன் கீழ் தவறு. இதையடுத்து போட்டி நடுவர் ஜெவ் குரோவ் உத்தரவின் பேரில், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே புதிய `கிளவுஸை' மாற்றினார் தோனி. இதனால் தண்டனையிலிருந்து தப்பினார்.
இந்தச் சூழலில் இந்தியாவை சேர்ந்த `சன்ரைசிங் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் தங்களது `கிளவுஸ்' தயாரிப்பில் தவறு எதுவுமில்லையென தெரிவித்துள்ளது. "நாங்கள் தயாரிக்கும் அதே `கிளவுஸை' தான் அவுஸ்திரேலிய கீப்பர் கில்கிறிஸ்ட் அணிந்து விளையாடுகிறார். அப்படியானால் தோனி பயன்படுத்தியது மட்டும் எப்படி தவறாகும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த கில்கிறிஸ்ட் இதுபற்றிக் கூறுகையில் எனது `கிளவுஸ்' பற்றி சர்ச்சை கிளம்புவதாகத் தெரிகிறது. யார் தயாரிக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் போட்டி நடுவர்கள் எனது `கிளவுஸை' ஆய்வு செய்து சரியானது தான் எனத் தெரிவித்துள்ளனர்.
`கிளவுஸ்' கையால் செய்யப்படுகிறது. சில நேரங்களில் பெரிதாக அமைந்துவிடும். சிட்னி போட்டியில் எனது `கட்சை' தோனி அருமையாகப் பிடித்தார். இவர் வேண்டுமென்றே பெரிய `கிளவுஸ்' அணிந்து விளையாட வாய்ப்பில்லை. இவர் தவறுதலாக அணிந்திருக்கலாம். இது அனைவருக்கும் நடக்கக்கூடியது தான்.
ஹைடனை சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை அவர் அவுஸ்திரேலிய அணியில் மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவர். இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்துக்கு முன்பாக மனதளவில் தயாராகி வருகிறோமென்றும் கில்கிறிஸ்ட் கூறினார்.