Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
`திரிபுசெய்யப்பட்ட பொய்யான தகவல்களை எப்போதுமே பிற நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்க முடியாது உண்மை எப்படியும் தெரிய வரும்'
[10 - March - 2008] [Font Size - A - A - A]
(வெள்ளிக்கிழமை தொடர்ச்சி)

* கலாநிதி குமார் ரூபசிங்கவின் சமாதானத்திற்கான ஒரு குரல் என்னும் நூலின் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடை பெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய ஆசியுரை

நாங்கள் இன்று புதியதொரு உலகத்தில் நடமாடுகின்றோம். தகவல் தொழில்நுட்பத்தின் வழிவந்த மின் உபகரணங்கள் ஊடாக பல செய்திகள் கணநிமிடத்தினுள் உலகமெங்கும் வியாபிக்கின்றன. எவ்வளவுதான் நாங்கள் உண்மைகளை மறைக்கப் பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் உண்மை வெளிவந்தே தீரும். ஆகவே, பத்திரிகைகள் திரிக்கப்பட்ட செய்திகளை வெளியிடாமல் இருப்பது அப் பத்திரிகைகளுக்கே நன்மை பயக்கும். உண்மையை அறிதல், உண்மையைப் பயமில்லாமல் வெளிப்படுத்தல் ஆகியவை பத்திரிகையாளர்களின் கடமை. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்களின் கருத்துரைகளை வெளியிடுவது அவர்கள் உரித்து. ஆனால், எங்கள் கருத்துரைகளை உண்மை போல் திரித்துக் கூறக் கூடாது. முன்னர் வைத்தியத் தொழில், ஆசிரியத் தொழில், சட்டத் தொழில் ஆகியன தான் மேம்பட்ட தொழில்களாகக் கணிக்கப்பட்டன. அவற்றிற்கென ஒரு மேலான தர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தத் தர்மந்தான் நிறைவான மனித சேவை. உடல், உள்ள வருத்தத்தைப் போக்குகின்றான் வைத்தியன். கல்வியால் மாணவ உள்ளங்களை வளமாக்குகின்றான் ஆசிரியன். மனித வாழ்க்கையின் சிக்கல்களைக் களைந்து கொடுக்கின்றான் சட்டத்தரணி. இவர்களுடன் இன்று பத்திரிகையாளனும் மாண்பு மிகுதொழில் ஒன்றினைச் செய்வதாக நாங்கள் கணிக்க வேண்டும். இலங்கையில் தம் தொழிலைச் சரியாகச் செய்யப்போய், மக்களுக்கு நன்மை செய்யப்போய், மனித சேவையில் ஈடுபடப்போய், குற்றவாளிகளை அடையாளம் காணப்போய் கூடிய உயிர்த் தியாகங்களை செய்தவர்கள் பத்திரிகையாளர்களே. அதை நாங்கள் மறக்கக் கூடாது. ஆனால், எமது பத்திரிகா தர்மத்துக்குப் பங்கம் விளைவிக்காது எதிர்ப்புக்களைத் துச்சமென மதித்து முன்னேறுவது பத்திரிகையாளர் கடமை. அந்தக் கடமை நெறியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் அனைவருந் தாமும் ஒரு மாண்பு மிகு தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இன்று இந்த நாட்டில் குற்றவாளிகள் பற்றி முறையிட்டால் முறையீட்டாளர்களை அரசாங்கம் சாடுகிறது. குற்றவாளிகளைக் குத்துக்கல்லாட்டம் விட்டுவிடுகிறது.

அண்மைக் காலங்களில் சர்வதேச உறவுகளில் ஒரு முக்கியமான புதுக்கருத்தொன்று உட்புகுத்தப்பட்டுள்ளது. நிலம், நீர், காற்று, ஆகாயம் யாவற்றினூடும் போக்குவரத்தும் செய்தித் தொடர்பும் வளர்ச்சி அடைந்துவர உலகமானது சிறுத்துவிட்டது. 1984 ஆம் ஆண்டில் நான் யாழ். கல்லூரி பரிசளிப்பு விழாவிற்குச் சென்றபோது அப்போதைய கல்லூரி அதிபர் கூறினார், `பொஸ்டனில் இருந்து அமெரிக்க மிஷன் தலைமையகத்திற்குச் சென்று அறிவுரைகள் பெற்றுவர இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் ஆறு மாதங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து போகவும் ஆறுமாதங்கள் திரும்பி வரவும் எடுத்தது' என்று. இன்றோ உலகின் எந்தக் கோடியில் இருக்கும் நாடும் ஒரு தொலைபேசி தூரத்தில் அல்லது ஒரு குமிழை அழுத்துந் தூரத்தில் உள்ளது. முன்னர் இங்கு நடப்பவை உள்நாட்டு விடயங்கள் எனப்பட்டன. இன்று அவ்வாறு நாட்டின் ஒரு பகுதியினரைக் கேவலமாக நடத்திவிட்டு அது உள்நாட்டு விடயம் என்று கூற முடியாது. ஒரு குடும்பத்தில் கூட கணவன் மனைவியைத் தாறுமாறாக அடித்தால் அது குடும்பப் பிரச்சினை எனப்பட்டது. இப்பொழுது அப்படியல்ல. ஏன் என்றால் எங்கள் நோக்குகள், தரங்கள், நியமங்கள் மாறிவிட்டன. மனித உரிமைகள், மாதர் உரிமைகள், சிறுவர் உரிமைகள் என்பவை எங்கள் அறிவிற்குள் பொருத்தப்பட்டுவிட்டன. அவற்றில் இருந்து எம்மால் விடுபட முடியாது. அவற்றிற்கு அடி பணிந்தே தீர வேண்டும். அதேபோலத் தான் சர்வதேச அரங்குகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்த ஒரு நாடாவது அதன் குடிமக்களில் ஒரு சாராரை மிகக் கொடுமையாக நடத்தி, வேறுபாடு காட்டி நடத்தத் தலைப்பட்டால் வேறு வழியின்றி அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேற்று நாடுகளில் தஞ்சம் புகுவர். அப்பொழுது உள்நாட்டில் நடப்பவை உள்நாட்டு விவகாரங்களாகக் கணிக்கப்படமாட்டா. எங்கள் நடவடிக்கைகள் பிற நாட்டார் எங்கள் நாட்டில் நடப்பவற்றை உன்னிக் கவனிக்க, அவதானிக்க வைத்துவிட்டன என்பதை நாங்கள் உணர வேண்டும். இதனால்த்தான் பாதுகாப்பதற்கான கடப்பாடு அல்லது Responsibility to Protect (R2P) என்ற கோட்பாடு இப்பொழுது வளர்ந்து வருகிறது.

இந்தக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. திரிபு செய்யப்பட்ட பொய்யான தகவல்களை எஞ்ஞான்றும் நாம் பிற நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. உண்மை எப்படியுந் தெரிய வரும். சிலரை எப்பொழுதும் ஏமாற்றலாம். பலரை சில முறையாவது ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்ற முடியாது. உண்மை வெளிவரும் போது காலம் கடந்து விடும். சர்வதேச சமூகம் தமது மனச்சாட்சிப்படி பாதுகாப்பிற்கான தமது கடப்பாட்டை ஒட்டி நாட்டில் நடக்கும் வன்முறை, அராஜகம் ஆகியவற்றைப் பற்றித் தட்டிக் கேட்க வேண்டிவரும். ஆகவே, நிகழ்வுகளை உண்மையாக நடந்தவற்றை நடந்தவாறு எழுதப் பழகிக் கொள்வோம். வேண்டியவாறு கருத்துரைகளை பத்திரிகையாளர்கள் வழங்கலாம். இன்றைய கூட்டத்தில் வெளியிடப்படும் நூல் போன்றவை மக்களிடையே அந்நியோன்யத்தை வளர்க்க வல்லவை. நியாயமான நோக்குடன் எழுதப்பட்டவை. இவற்றின் நற்தாக்கங்கள் பொதுமக்களைப் போய் அடைவன.

இன்றைய நூலின் கட்டுரைகளை வழங்கிய அதன் ஆசிரியருக்கு நீண்ட ஆயுளையும் சுகமான வாழ்வையும் பயம் இல்லாமல் பொதுச் சேவையில் ஈடுபடக்கூடிய மனவலிமையையும் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட நூல்களைத் தமிழிலுஞ் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடும் வல்லமையையும் வசதியையும் இறைவன் அருள வேண்டும்.

Email this page Your Opinion Print this page
கவனிப்பாரற்ற நிலையில் களுத்துறை தமிழ்ப் பாடசாலைகள்
இரும்புத் தாடை தேவதைகள்
`திரிபுசெய்யப்பட்ட பொய்யான தகவல்களை எப்போதுமே பிற நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்க முடியாது உண்மை எப்படியும் தெரிய வரும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com