Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கவனிப்பாரற்ற நிலையில் களுத்துறை தமிழ்ப் பாடசாலைகள்
[10 - March - 2008] [Font Size - A - A - A]
-த.மனோகரன்-

மேல் மாகாணத்திற்குட்பட்ட களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, அகலவத்தை, ஹொரணை, புளத்சிங்கள ஆகிய தொகுதிகளில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அதேபோன்று களுத்துறை, பாணந்துறை, பண்டாரகம, பேருவளை ஆகிய தொகுதிகளிலும் தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றனர். சுமார் அறுபத்து இரண்டாயிரம் தமிழ் மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலேயே வாழ்கின்றனர்.

அரசியல் ரீதியில் முற்றாக கைவிடப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஒரு தமிழர் கூட தெரிவுசெய்யப்படவில்லை. அதற்கு முற்பட்ட தேர்தலில் ஐந்து தமிழ்ப் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தபோதும் அது தற்போது முற்றாக இழக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களாக முப்பதாயிரம் வரையான தமிழர்கள் இருந்தும் அரசியல் ரீதியாக அநாதைகளாக ஆக்கப்பட்டமைக்கான ஏது ஆராயப்பட வேண்டியதாகும்.

நிலைமை இவ்வாறிருப்பதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களது நலன் பற்றி சிந்திப்பதற்கோ எடுத்துக் கூறி உரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ முடியாத நிலை நிலவுகின்றது என்பதையிட்டு வேதனை ஏற்படுகின்றது.

களுத்துறை, ஹொரணை, மத்துகம ஆகிய மூன்று கல்வி வலயங்களிலும் இருபத்தேழு தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றுள் மத்துகம சென்.மேரீஸ் வித்தியாலயத்தில் சிங்களப் பாடசாலைக் கட்டிடத்தில் தமிழ்ப் பாடசாலை இயங்குகின்றது.

சொந்தக் கட்டிடம் அற்ற நிலையில் 650க்கும் அதிகமான மாணவர்களுடன் இயங்கும் இப்பாடசாலையில் உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தக பாடங்கள் கற்பிக்கப்பட்டபோதும் அப்பாடங்களைக் கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை.

மத்துகம சென்.மேரீஸ் தமிழ்ப் பாடசாலைக்கு சொந்தக் கட்டிடம் பெற்றுத்தரப்படும் என்று காலத்திற்குக் காலம் உறுதிமொழி வழங்கப்பட்டு வந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இது தொடர்பில் மேற்கொள்ளப்படவில்லை. வெறும் மேடைப் பேச்சாக உறுதிமொழியாக மட்டுமே சொந்தக் கட்டிடம் வழங்கும் திட்டம் உள்ளது.

ஹொரணை கல்வி வலயத்திலுள்ள மில்லகந்த தமிழ் வித்தியாலயத்திலும் முதலாம் ஆண்டு முதல் பதின்மூன்றாம் ஆண்டு வரை வகுப்புகளிலிருந்தபோதும் உயர்தர வகுப்பில் கலைப்பிரிவு மட்டுமே போதிய தகைமை கொண்ட ஆசிரியர்களின்றி நடைபெறுகின்றது.

களுத்துறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து இதுவரை ஒரு மாணவராவது பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறவில்லை என்பது தமிழ்ப் பாடசாலைகளின் நிலையை எடுத்துக் காட்டுகின்றது.

மத்துகம கல்வி வலயத்திலுள்ள சீடா திட்டத்தின் கீழ் அமையப் பெற்ற குளோடன் வித்தியாலயம் நவோதய பாடசாலையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகளும் ஏனைய குறைபாடுகளும் தீர்க்கப்படாதவரை நவோதய திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் அங்கு பயிலும் மாணவர் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

நவோதய திட்டத்தின் கீழ் தமிழ்ப் பாடசாலையொன்று களுத்துறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்ற பெயர் மட்டும்தான் மிஞ்சியுள்ளது என்பதை கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது.

மேற்படி குளோடன் தமிழ் வித்தியாலயத்தை க.பொ.த. உயர்தர வகுப்பில் கலை, வர்த்தக, விஞ்ஞானப் பாடநெறிகள் கொண்டதாகத் தரமுயர்த்தி தேவையான ஆசிரியர்களை நியமித்து உரிய தேவையான பௌதிக வளங்களையும் பெற்றுக் கொடுத்தால் களுத்துறை மாவட்டத்தில் ஒருதரமான தமிழ்ப் பாடசாலையை உருவாக்க முடியும். அதுமட்டுமல்ல அங்குள்ள கட்டிட வளங்களைப் பயன்படுத்தியும் இட வசதியுள்ளதால் புதிய கட்டிடங்களை அமைத்தும் மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய விடுதி வசதியை ஏற்படுத்தலாம்.

விடுதி வசதி ஏற்படுத்தப்படுமானால் தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களது பயணச் செலவைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் வசதியுடன் பயிலக் கூடியதாகவும் இருக்கும். ஏனெனில், மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கான பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதாயுமமையும். இது தொடர்பில் களுத்துறை மாவட்ட தமிழ் மாணவர் கல்வி நலனில் அக்கறை கொண்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மத்துகம சென்.மேரீஸ் வித்தியாலயத்திற்குச் சொந்தக் கட்டிடம் பெற்றுக் கொடுத்து அதன் கல்வி நிலையை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் மில்கந்த, குளோடன் ஆகிய பாடசாலைகளில் கூடிய அக்கறையுடன் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமும் களுத்துறை மாவட்டத்தில் தரமான உயர்தர வகுப்பு வரை தமிழ் மாணவர்கள் கல்வி பயிலக்கூடிய மூன்று பாடசாலைகளை உருவாக்க முடியும். இதேபோன்று ஏனைய தமிழ்ப் பாடசாலைகளின் தேவைகளும் தீர்த்துவைக்கப்பட வேண்டும்.

இம்மாவட்டத்தில் வளங்கள் வழங்கப்படாத நிலையில் தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவது ஒருபுறமும் நிகழ, கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பாராமுகமும் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மேலும் அவலத்திற்குரியனவாயுள்ளன.

தோட்டப்புறங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைக்குச் செல்லும் ஆசிரிய ஆலோசகர்கள் பலர் தமக்குரிய கடமைகளை ஆற்றுவதில்லை என்ற குறை பரவலாகக் கூறப்படுகின்றது.

தோட்டப்புறத் தமிழ்ப் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரிய ஆலோசகர்கள் தாம் பயணித்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடம் திரும்பிவரும் போது அதே பேருந்தில் தாம் செல்ல வசதியாக பேருந்தை நிறுத்தி ஒலியெழுப்புமாறு கேட்டுக்கொள்வதும் பாடசாலைக்குச் சென்ற ஆசிரிய ஆலோசகர் ஓடிச்சென்று அதிபரிடம் தனது குறிப்பேட்டில் ஒப்பம் பெற்று திரும்பிவந்து பேருந்து தரிப்பிடத்தில் நிற்பதும் காணக்கூடியதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

பாடசாலையின் வகுப்பறைகளுக்குச் சென்று தமக்கு வழங்கப்பட்ட பணியை நிறைவேற்றாத ஆசிரிய ஆலோசகர்கள் ஒருபுறமும் அவர்களது செயற்பாடுகளை மேற்பார்வை செய்யாது கண்டும் காணாததாக இருக்கும் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பாராமுகம் ஒருபுறமுமாக களுத்துறை மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டிற்குத் தடையாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆண்டு தோறும் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உரியமுறையில் தமிழ்ப் பாடசாலைகளுக்குச் சென்றடையாது தமிழ் மொழி மூலமான ஏனைய பாடசாலைகளுக்கு செலவிடப்படுவதாகக் கூறப்படுவதையிட்டும் கவனம் செலுத்தப்படவேண்டும். தமிழ்ப் பாடசாலைகளுக்குக் கிடைக்க வேண்டிய பௌதிக வளங்கள் உரியமுறையில் கிடைப்பதை உறுதிசெய்ய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

களுத்துறை மாவட்ட தோட்டப் பகுதிகளில் இன்று அரசியல் கட்சிகளாகச் செயற்படும் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க சந்தா வசூலிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்குகின்றன. அரசியல் ரீதியாக அம்மக்களை வழி நடத்த முனைவதில்லை. அதனால் அரசியல் ரீதியாகப் பெறவேண்டிய உரிமைகளும் சலுகைகளும் இழந்த நிலை நிலவுகின்றது.

இன்று கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளவும் அரசியல் ரீதியான அந்தஸ்து தேவையாகிவிட்டது. மனிதனுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் அரசியல் குறுக்கிடுகின்றது. களுத்துறை மாவட்டத்தின் பொருளாதார வளத்தின் ஒரு முக்கிய சக்தியாக விளங்கும் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதையிட்டு எவரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

சந்தா வசூலிப்பதில் அக்கறை காட்டும் தொழிற்சங்கங்கள் பல அரசியல் கட்சிகளாகவும் இயங்குகின்றன. அத்துடன், அவற்றின் தலைவர்கள் பலர் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் மத்திய அரசில் செயற்படுகின்றனர். இவ்வாறிருக்கும்போது களுத்துறை மாவட்ட தமிழ் மக்களது நலன்கள் பாதுகாக்கப்படாமலிருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டி நிவாரணம் காண்பது அவசியமாகின்றது. பொறுப்புள்ளவர்கள் கவனம் செலுத்துவார்களா?

Email this page Your Opinion Print this page
கவனிப்பாரற்ற நிலையில் களுத்துறை தமிழ்ப் பாடசாலைகள்
இரும்புத் தாடை தேவதைகள்
`திரிபுசெய்யப்பட்ட பொய்யான தகவல்களை எப்போதுமே பிற நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்க முடியாது உண்மை எப்படியும் தெரிய வரும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com