படுமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதி தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன முன்னணி பிரமுகர்கள் குழு அதன் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு தங்களால் மேலும் பங்களிப்பைச் செய்யக்கூடிய வாய்ப்புக்களைக் காண முடியவில்லை என்று அக்குழுவினர் தங்களது தீர்மானத்துக்கான காரணத்தைத் தெரிவித்து கடந்த வாரம் அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்கள். தகுந்த முறையில் பரிசீலனை செய்து அடிப்படைக் காரணங்களுக்காகவே தங்கள் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தீர்மானிக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக தங்களது யோசனைகளில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டு அல்லது அலட்சியம் செய்யப்பட்டு வந்ததாகவும் நடவடிக்கைகள் மீது அவதூறு கற்பிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் விசனம் தெரிவித்திருக்கிறார்கள்.
சர்வதேச சுயாதீன முன்னணி பிரமுகர்கள் குழுவின் இத்தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கையின் சட்ட மா அதிபர், `சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு உதவி செய்யும் நோக்குடனேயே இக்குழுவினர் பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிட்டுவந்திருக்கிறார்கள். இவர்களினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட ஐந்தாவது அறிக்கையும் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது கூட்டத்தொடருடன் தருணப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது' என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அரசாங்க சார்பற்ற பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தின் 16 உள்ளூர் பணியாளர்கள் மூதூர் நகரில் 2006 ஆகஸ்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதே வருடம் ஜனவரியில் திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 16 படுமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு 2006 நவம்பரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் நிசங்க உடலாகம தலைமையில் ஆணைக்குழுவை நியமித்திருந்தார். ஒருவருட கால ஆணையைக் கொண்ட இந்த ஆணைக் குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன முன்னணிப் பிரமுகர்கள் குழுவை 2007 பெப்ரவரியில் ஜனாதிபதி ராஜபக்ஷ நியமித்தார். ஆணைக்குழுவின் ஒரு வருட ஆணை கடந்த வருடம் நவம்பரில் முடிவடைந்ததையடுத்து மீண்டும் ஒருவருட காலத்துக்கு அதன் ஆணையை ஜனாதிபதி நீடித்திருக்கிறார். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதே முன்னணிப் பிரமுகர்கள் குழுவிற்கும் இலங்கை அரசாங்கத் தரப்பினருக்கும் குறிப்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையே ஒரு போதுமே ஒத்திசைவான உணர்வுகள் இருந்ததில்லை.
சர்வதேச முன்னணிப் பிரமுகர்கள் குழு ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்தவாரத்தைய அறிக்கையுடன் சேர்த்து ஐந்து அறிக்கைகளை இதுவரை வெளியிட்டிருக்கிறது. ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இல்லை என்பதை பிரமுகர்கள் குழு அதன் முதல் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியிருந்தது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு இசைவானதாக இல்லை என்பது பிரமுகர்கள் குழுவின் தொடர்ச்சியான குற்றச்சாட்டாக இருந்து வந்திருக்கிறது. விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பங்கேற்பு உட்பட பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரமுகர்கள் குழு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. ஆனால், ஆணைக்கழுவின் தலைவரும் சட்டமா அதிபரும் பிரமுகர்கள் குழு தெரிவித்த யோசனைகளில் இருக்கக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களை கவனத்துக்கு எடுப்பதிலும் பார்க்க அந்த யோசனைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலான அறிக்கைகளையே அவ்வப்போது விடுத்து வந்தனர். நீதியரசர் பகவதி ஒரு கட்டத்தில் சர்வதேச பிரமுகர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதையடுத்து தொடர்ந்தும் அப்பதவியை அவர் வகித்து வந்தார்.
குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகளைக் கிளப்புவதற்கோ அல்லது யோசனைகளைத் தெரிவிப்பதற்கோ சர்வதேச பிரமுகர்கள் குழுவுக்கு ஆணை கிடையாது என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்துவந்தது. அத்தகையதொரு பின்புலத்திலேயே தொடர்ந்தும் தங்களினால் உருப்படியான முறையில் செயலாற்றமுடியவில்லை என்ற முடிவுக்கு பிரமுகர்கள் குழுவினர் வந்திருக்கிறார்கள் போலத்தெரிகிறது. பிரமுகர்கள் குழுவின் மூன்று நாள் கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவிருக்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் விரிவான அறிக்கையொன்றையும் விடுக்கவிருக்கிறார்கள். இந்தப் பிரமுகர்கள் குழுவினர் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை நிறுத்திக் கொண்டால் அதே பணிகளுக்காக ஜனாதிபதி ராஜபக்ஷ வேறு சர்வதேசப் பிரமுகர்கள் அடங்கிய குழுவை நியமிக்க முடியும் என்ற கருத்து கொழும்பு ஊடகங்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டிருக்கிறது.
2005 பிற்பகுதியில் இருந்து மீண்டும் மோதல்கள் தீவிரமடையத் தொடங்கியதையடுத்து மனித உரிமை மீறல்களும் அதிகரிக்கத் தொடங்கின. இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பொறுத்தவரை அவற்றில் சம்பந்தப்படுகின்ற சக்திகள் சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று செயற்படுகின்றமையே மிகவும் கவலைக்குரிய அம்சமாகும். இது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளினாலும் சர்வதேச சமூகத்தினாலும் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்ட கண்டனங்களையும் விசனத்தையும் அடுத்தே ஆணைக்குழு நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழான சர்வதேச கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதே காலகட்டத்தில் வலுவடைய ஆரம்பித்தது. தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவினர் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் செயற்படுத்தப்படும் கட்டமைப்புகள் போதுமானவை என்ற வாதத்தையே பெரும் பிரயத்தனப்பட்டு முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கான எந்தவொரு சாத்தியப்பாட்டுக்கும் இடமளிக்காமல் இலங்கை திரும்ப வேண்டும் என்பதில் இலங்கைத் தூதுக் குழுவினர் குறியாக இருக்கிறார்கள்.இலங்கையின் மனித உரிமைமீறல் நிலைவரம் தொடர்பில் உண்மை நிலையைப்பற்றிக் கவலைப்படாமல் வாதத்திறமையால் சாதனை படைப்பதில்தான் அக்கறை காட்டப்படும் விபரீதம்.
ஆனால், சர்வதேச சுயாதீன முன்னணி பிரமுகர்கள் குழுவின் கடந்த வாரத்தைய தீர்மானம் மனித உரிமைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளின் நம்பகத்தன்மையை சர்வதேச சமூகத்தின் மத்தியில் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்காகவே பிரமுகர்கள் குழு இச் சந்தர்ப்பத்திலும் பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கத்தின் தர்மசங்கடத்தை அம்பலப்படுத்தி நிற்கின்றது. ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகள் விடுப்பதென்பது ஒரு வகையில் மனித உரிமை மீறல்களை உற்சாகப்படுத்துவதாகவே அமையும். சர்வதேச பிரமுகர்கள் குழு அதன் சகல அறிக்கைகளிலும் சுட்டிக் காட்டியதைப் போன்று ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெளிவாகத் தெரியக்கூடிய முன்னேற்றம் எதையும் காணமுடியவில்லை என்ற உண்மையை அரசாங்கம் புரிந்துகொள்வது அவசியம்.