அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவிற்காக வியோமிங் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக செனட்டர் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.
இம் மாநிலத்தில் பராக் ஒபாமா 61 வீதம் - 38 வீதம் என்ற ரீதியில் தனது போட்டியாளரான செனட்டர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்துள்ளார்.
பேராளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் ஒபாமா முன்னிலையில் வகிக்கின்ற போதும் டெக்ஸாஸ் மற்றும் ஒஹியோ மாநிலங்களில் ஹிலாரியிடம் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவதற்கு ஒபாமா தீவிரமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
12 பேராளர்களைக் கொண்ட வியோமிங்கில் 7 பேராளர்களை ஒபாமாவும் 5 பேராளர்களை ஹிலாரியும் பெற்றுள்ளனர்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளராவதற்கு 2025 பேராளர்களை வெற்றி கொள்ள வேண்டிய இலக்குடன் களமிறங்கியுள்ள ஒபாமா தற்போது 1578 பேராளர்களையும் ஹிலாரி 1468 பேராளர்களையும் பெற்றுள்ளனர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஏற்கனவே ஜோன் மக்கெய்ன் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்ட தேர்தல் நாளை மிசி- சிப்பி மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வியோமிங்கில் தனது ஆதரவாளர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொண்ட ஒபாமா 2009 இற்குள் ஈராக் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை மிசிசிப்பியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஹிலாரியும் ஈராக் மீதான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஒபாமா 25 மாநிலங்களிலும் ஹிலாரி 16 மாநிலங்களிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.