பாகிஸ்தானில் அமையவுள்ள கூட்டணி ஆட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி முஷாரப்பை பதவி நீக்கம் செய்வது, அரசியல் சாசனத்தைத் திருத்துவது போன்றவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய கூட்டணி அரசுக்கு, மூன்றில் 2 பங்கு பெரும்பான்மைக்கு 5 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர்.
இருப்பினும், தேர்தல் ஒத்திவைப்பு உள்ளிட்ட காரணங்களால் 10 இடங்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
அந்த பத்து இடங்களில் 5 இல் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பாகிஸ்தான் அரசில் அங்கம் வகிக்கவுள்ள கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
பாராளுமன்ற மொத்த இடங்கள் 342, அதில் நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அந்தந்தக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கேற்ப, நியமன இடங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேர்தலில் அதிகபட்சமாக 87 இடங்களில் வென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் கிடைத்துள்ளன.
அதற்கடுத்து, நவாஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. புதிய அரசு அமைக்க இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, நவாஸ் கட்சியும் அவாமி தேசிய கட்சியும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், புதிய கூட்டணிக்கு 223 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலத்துக்கு 5 இடங்கள் குறைவாகும்.
5 உறுப்பினர்களின் பலம் இருந்தால் மட்டுமே, ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வது, அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 342 இடங்களில் 331 இடங்களை ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஞ்சிய இடங்களில் 5 இல் வெற்றிபெற்று மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியும் என முக்கிய கட்சிகள் நம்பிக்கையுடன் உள்ளன.