மலேசியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பரிசான் தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அக்கட்சி பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இக்கட்சி 219 பாராளுமன்ற ஆசனங்களில் 139 ஆசனங்களை பெற்றுள்ள போதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
அத்துடன், இன்னும் மூன்று ஆசனங்களின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னடைவுக்கு மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் விவகாரம், பணவீக்கம் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமையே காரணமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிவுகளின் பின்னர் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சத்தில் மக்களை அமைதியாக இருக்குமாறு பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் மலேசியாவில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான தருணம் இதுவென்பதை வெளிக்காட்டி நிற்பதாக எதிர்க்கட்சி பிரமுகர்களில் ஒருவரான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 82 ஆசனங்களில் 31 ஆசனங்களை அன்வரின் நீதிக்கட்சி வென்றுள்ளமையால் அவர் தன்னை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிக்கொண்டுள்ளார்.
2003 இலிருந்து பிரதமராக பதவி வகிக்கும் பிரதமர் அப்துல்லா, அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள அதேவேளை, அவரது கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கக் கூடுமென நிலவும் ஊகங்களை அவர் நிராகரித்துள்ளார்.
ஆனால், மக்கள் மாற்றமொன்றை விரும்புவதும் 1957 இலிருந்து அதிகாரத்திலிருக்கும் தேசிய முன்னணியை சீனர்களும் இந்தியர்களும் நிராகரித்திருப்பதும் தெளிவாகியுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இத் தேர்தலுக்கு முன் ஒரு மாநிலம் மட்டுமே எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. ஆனால், இத் தேர்தலில் ஏற்கனவே இருந்தது உட்பட மேலும் 4 மாநிலங்களை எதிர்க்கட்சிகள் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் அரசாங்கம் வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை, ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகித்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு இத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்.
மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சாமிவேலு எதிர்க்கட்சி வேட்பாளரொருவரிடம் தோல்வி கண்டுள்ளார்.
8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிவேலு 30 ஆண்டுகளாக அமைச்சர் பதவியை வகித்தவர்.
தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறி இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட போது அவர்களுக்காக குரல் கொடுக்காததுடன் இந்தியர்களுக்கு ஆதரவாக எந்தவித நடவடிக்கைகளையும் சாமிவேலு மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டுக்களே இவரது தோல்விக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய வம்சாவளியினரின் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த்ராவ் அமைப்பின் பிரமுகர்களில் ஒருவரான எம். மனோகரன் இத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை, வாக்களிப்பு நேரங்களின் போதும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும் வீதிகளில் கூடிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பொலிஸார் கலையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.