வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி ஆகியோரின் வாகனம், வீடு என்பன தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டமைக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பு சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவாஹர்ஷா தலைமையில் இடம்பெற்றபோது இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
"மக்கள் பிரதிநிதிகள் மீதும் அவர்களது உடமைகள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். மாகாணசபை உறுப்பினர் நியாஸ், அவரது வீட்டின் பின் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனம் கூரிய ஆயுதங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப் மமதையில் சிலர் இவ்வாறான சமூக விரோத பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல் ஊடகவியலாளரும் நகர சபை உறுப்பினருமான முஹ்ஸியின் வீட்டு ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து நாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளோம். பொலிஸ் மா அதிபர் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும்" என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.