பயங்கரவாதிகள் கொடுக்கும் பணத்திற்கு எதையும் செய்யக் கூடியளவில் சிங்களவர்கள் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள சப்ரகமுவ மாகாண காணி விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் த.சொய்ஸா தமிழ் மக்கள் அனைவரையும் புலி முகத்தை கொண்டு பார்க்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குவானை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் நடைபெற்ற கிராம சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பி.எம்.யூ. நெலும் தெனிய தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றிய போது கூறியதாவது;
இன்று இந்நாட்டை சீர்குலைக்க முற்பட்டு வரும் பயங்கரவாதிகள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைய முற்படுகின்றனர். இவற்றை முறியடித்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் சமாதானத்துடன் சுதந்திரமாக வாழவைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் யுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் தென்பகுதிகளுக்கு புலிகள் ஊடுருவி பொதுமக்களை கொலை செய்கின்றனர்.
இப்பகுதிகளில் தோட்டப்புற மக்கள் வாழுகின்றனர். இவர்களை நாம் புலிகள் என்று முத்திரை குத்தக்கூடாது. இவர்கள் வீதியில் இறங்கி தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலுள்ளனர்.
இன்று சிங்களவர்களும் இனத்தைக் காட்டிக் கொடுத்து பயங்கரவாதிகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்திலும் எமது மக்கள் காட்டி கொடுத்தவர்களாகவே இருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இந்நாட்டை ஆட்சி செய்தனர்.
இவர்கள் தேசிய மட்டத்தில் பயங்கரவாதிகளின் பிரச்சினைகளை தீர்க்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சரியான முறையில் கையாண்டு வருகின்றார்.
யுத்தத்தில் பயங்கரவாதிகள் தோற்கும் தறுவாயிலுள்ளனர். மீண்டும் பயங்கரவாதிகளுடன் சமாதானம் பேச தேவையில்லை. யுத்தத்தின் மூலம் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதே சரியான தீர்வு என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பணத்திற்காக காட்டிக் கொடுப்பதற்கு மக்கள் மட்டுமல்ல இராணுவத்தினரும் பொலிஸாரும் இருக்கின்றனர் என்றார்.