கண்டியில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு அங்கு பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிராம சேவையாளரால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் கிராம சேவையாளரிடம் வழங்க வேண்டும்.
அதன்படி, கிராம சேவகர் குறிப்பிட்ட விண்ணப்பம் குறித்து உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ் குடியிருப்பாளர் மீதே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்கள் பற்றி முறையாக குறிப்பிட்டு அதனை மீளவும் ஒப்படைக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க இதுபற்றி தெரிவிக்கையில், இப்பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அங்கு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கானதல்ல என கூறியுள்ளார்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு நாடு பூராவும் முன்னெடுக்கப்படும் செயல்திட்டத்துக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.
இப்பகுதியில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட பெயருக்கு உரியவர்தான் என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவத்தை உரியமுறையில் பூர்த்தி செய்து மீளவும் ஒப்படைக்க தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கை ஒருபோதும் குறிப்பிட்ட ஒரு இனத்தவருக்கு எதிராக அல்ல, எல்லா மக்களுக்கும் நாம் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.