இலங்கை அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலை தொடர்ந்து அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது ;
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரதிநிதிகளுடன் மிக முக்கிய கூட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார். இலங்கை அரசு இஸ்ரேலுக்கு அதிகாரிகளை அனுப்பியது தொடர்பாக அவர்கள் தமது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேலுக்க பயணம் செய்யப்போவதில்லையென்று மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரிவித்திருந்த போதும், பிரதமர் தலைமையிலான குழு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது.
அப்போது ஜனாதிபதியின் உதவியாளர் ஜனாதிபதியிடம் குறிப்பொன்றை சமர்ப்பித்தார். இதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முகம் மாறிவிட்டது. பின்னர் முக்கிய பிரமுகர் இறந்துவிட்ட செய்தியை ஜனாதிபதி எல்லோருக்கும் தெரிவித்தார். எல்லோரும் எழுந்து இரு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்த முக்கிய பிரமுகரின் சேவை தொடர்பான இரங்கல் அறிக்கை ஒன்றும் அரசினால் உடனடியாகத் தயாரிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் மற்றுமொரு குறிப்பு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தக் குறிப்பில், இறந்து விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட முக்கிய பிரமுகர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக அரசினால் வெளியிடப்படவிருந்த அறிக்கை கிழித்தெறியப்பட்டதுடன், அரசு மிகப்பெரும் அவமானத்திலிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.